1. குன்றக் குரவை





ஆய்வளை நல்லாய் இதுநகை யாகின்றே
மாமலை வெற்பனோய் தீர்க்கவரும் வேலன்
வருமாயின் வேலன் மடவன் அவனிற்
குருகு பெயர்க்குன்றங் கொன்றான் மடவன் ;    (11)



11
உரை
11

       ஆய் வளை நல்லாய் இது நகையாகின்றே மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் - நுண்ணிய வினையமைந்த வளையலை அணிந்த தோழீ எனக்குப் பெரிய மலையினையுடைய வெற்பனால் உண்டாய நோயினைத் தீர்ப்பதற்கு வேலன் வருவான் இச் செயல் நகைத்தற்குரியதாயிற்று, வருமாயின் வேலன் மடவன் - அங்ஙனம் என்னோயினைத் தீர்ப்பதற்கு வேலன் வருவானாயின் அவன் அறியாமை உடையன், அவனிற் குருகு பெயர்க் குன்றம் கொன்றான் மடவன் - அவ் வேலனிலும் கிரவுஞ்ச வெற்பைக் கொன்ற முருகன் அறியாமை யுடையன் ;

       ஆய்தல் - நுணுக்கம். வெற்பன், வாளா பெயராய் நின்றது. நோய் - காமநோய். வேலன் அழைக்க வருவானாயின் குன்றங்கொன்றான் மடவன் என்றாள் ; எனவே அவன் வாரானென்னுங்கருத்தின ளென்க. குருகு பெயர்க்குன்றங் கொன்றான் மடவன் என்ற கருத்து, 1"வேலன் வேண்ட வெறிமனை வந்தோய், கடவுளாயினு மாக, மடவை மன்ற வாழிய முருகே" என நற்றிணையில் வந்துள்ளமை அறியற்பாலது. நல்லாய் வேலன் நோய் தீர்க்க வரும் இது நகையாகின்றே என முடிக்க, பின்வருவனவற்றையும் இங்ஙனமே முடிக்க.

1 நற். 34.