1. குன்றக் குரவை





செறிவளைக்கை நல்லாய் இதுநகையா கின்றே
வெறிகமழ் வெற்பனோய் தீர்க்க வரும்வேலன்
வேலன் மடவன் அவனினுந் தான்மடவன்
ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின் ;    (12)



12
உரை
12

       செறி வளைக்கை நல்லாய் இது நகையாகின்றே வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் - செறிந்த வளையலை அணிந்த கையினையுடைய தோழீ மணங் கமழும் வெற்பன் தந்த நோயினைத் தீர்ப்பதற்கு வேலன் வருவான் இச் செயல் நகைத்தற்கு உரித்து, வேலன் மடவன் - அங்ஙனம் வரும் வேலன் அறியாமை யுடையன், அவனினும் தான் மடவன் ஆல் அமர் செல்வன் புதல்வன் வருமாயின் - கல்லாலின் கீழ் அமர்ந்த செல்வனாகிய சிவபிரானுடைய புதல்வன் ஈங்கே வருவானாயின் அவ்வேலனிலும் தான் அறியாமையுடையன் ;

       வெறி கமழ் என்ற அடை வெற்பனுக்கும் வெற்புக்கும் பொருந்தும். புதல்வன் வருமாயின் அவனினும் மடவன் என்க.