1. குன்றக் குரவை





நேரிழை நல்லாய் நகையா மலைநாடன்
மார்பு தருவெந்நோய் தீர்க்க வரும்வேலன்
தீர்க்க வரும்வேலன் தன்னினுந் தான்மடவன்
கார்க்கடப்பந் தாரெங் கடவுள் வருமாயின் ;    (13)



13
உரை
13

       நேர் இழை நல்லாய் நகையாம் மலைநாடன் மார்பு தரு வெந் நோய் தீர்க்க வரும் வேலன் - அழகிய கலன்களை அணிந்த தோழீ மலைநாடனது மார்பு தந்த கொடிய நோயினை வேலன் தீர்க்க வருவான் இது நமக்கு நகையினைச் செய்யும், தீர்க்க வரும் வேலன் தன்னினும் தான் மடவன் கார்க்கடப்பந் தார் எம் கடவுள் வருமாயின் - கார்காலத்தே பூக்கும் கடப்ப மலர்மாலையை அணிந்த எங்கள் முருகக் கடவுள் வருவானாயின் அங்ஙனம் நோய் தீர்க்க வரும் வேலனிலும் தான் அறியாமை யுடையன் ;

வெந்நோய் என்ற குறிப்பு அவ் வெற்பனாலன்றித் தீர்த்த லொண்ணாது என்பது குறித்து நின்றது. கடம்பு கார்காலத்திலருமென்பது, "காரலர் கடம்பனல்லன்" என வருவதுகொண்டு ணர்க. எம் கடவுள் என்றாள், மலையுறை கடவுளாகலான். கடவுள் வருமாயின் வேலன் தன்னினுந்தான் மடவன் என்க. இவை நான்கினும் பிறர்கண் தோன்றிய பேதைமை பொருளாக நகை பிறந்தது.