1. குன்றக் குரவை





வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து
நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும்
ஆலமர் செல்வன் புதல்வன் வரும்வந்தால்
மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே ;     (14)



14
உரை
14

       வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து - வேலன் வந்து வெறியாடலைச் செய்யும் விரும்பத்தக்க களத்திடத்தே, நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும் ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் - கல்லாலமர்ந்த இறைவன் புதல்வனாகிய முருகன் நீல நிறமுடைய மயிலின்மீது சிறந்த கலனை அணிந்த வள்ளி யோடும், வருவான், வந்தால் மால் வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே - அங்ஙனம் வந்தால் அவனைப் பெரிய மலையினையுடைய வெற்பன் நம்மை மணஞ்செயது கோடல் கருதி வணங்குவோம் ;

       வேலனார், இழித்தற்குறிப்பு. வெங்களம் - வெவ்விய களமுமாம். பறவை - நீலநிறமுள்ள மயில். நேரிழை - வள்ளி ; தங் குடியிற் பிறந்தவளாகலான் அவளையே கூறினாள் என்க. இதனைப் பின்னர், "குறமக ளவளெம குலமக ளவளொடும், அறுமுக வொருவனின் னடியிணை தொழுதேம்" எனக் கூறுமாற்றா னறிக. மணவணி - மணக்கோலம் ; ஈண்டு இது மணவினை என்னும் பொருட்டாய் நின்றது. 1"இருபெருங் குரவரு மொருபெரு நாளான், மணவணி காண மகிழ்ந்தனர்" என்றவிடத்தும் இச் சொல் இப் பொருட்டாய் நிற்றல் காண்க.


1 மணி. 4 : 46.