|
|
கயிலைநன் மலையிறை மகனைநின் மதி
நுதல்
மயிலியல் மடவரல் மலையர்தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
அயல்மணம் ஒழியருள் அவர்மணம் எனவே ; (15)
|
|
கயிலை நன்மலை இறைமகனை - கயிலையாகிய நல்ல மலைக் கண் உளனாகிய இறைவன் புதல்வனே,
அயல் மணம் ஒழி அருள் அவர் மணம் எனவே - ஏதிலாருடைய மணத்தினை விலக்கிடு எம் நலனுண்டு
நல்காதாருடைய மணத்தினை ஈந்திடு என்றே, நின் மதிநுதல் மயில் இயல் மடவரல் மலையர்தம்
மகளார் - நினக்குரிய மதி போன்ற நுதலினையும் மயில்போன்ற சாயலினையும் மடப்பத்தையும்
உடைய குறவர் மகளாரின், செயலைய மலர் புரை திருவடி தொழுதேம் - அசோகின் மலரினை ஒத்த
திருவடிகளை வணங்கினேம் ;
மகனை என்பதன் கண் 'ஐ' இடைச்சொல்.
அயன் மணம் எனக்கொண்டு பிராசாபத்தியம் என்பர் அரும்பதவுரை யாசிரியர். மலையர் -
மலைவாணர் ; குறவர் மகளார் - வள்ளி ; ஆர், உயர்வு குறித்தது. யாம் விரும்பியபடி நீ
அருள் செய்தற்கு நின் முழு அன்பிற்கும் உரியவளும் எம் குலத்துதித்தவளுமாகிய வள்ளிப்
பிராட்டியின் அடிகளை வணங்குதலே உபாயமெனக் கொண்டு வணங்கினோம் என்றாள் ; நின் அடிகளையும்
மகளார் அடிகளையும் வணங்கினோம் என்றலுமாம். அவர் - தலைவர் ; இயற்பெயரின்றியே இங்ஙனம்
சுட்டுப் பெயர் வருதல் புலனெறி வழக்கிடைப் பயின்றுள தென்க. . |
|