|
என்றலும்
இறைஞ்சியஞ்சி இணைவளைக்கை எதிர்கூப்பி
நின்றஎல்லையுள் வானவரும் நெடுமாரி மலர்பொழிந்து
குன்றவரும் கண்டுநிற்பக் கொழுநனொடு கொண்டுபோயினார்
|
|
என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளைக்கை எதிர் கூப்பி நின்ற எல்லையுள் - என்றிங்ஙனம்
அவள் கூறியவுடனே யாங்கள் அச்சமுற்று வணங்கி வளை அணிந்த இரு கைகளையும் அவளெதிர் குவித்து
நின்றவளவில், வானவரும் நெடுமாரி மலர் பொழிந்து குன்றவரும் கண்டு நிற்பக் கொழுநனொடு
கொண்டு போயினார் - தேவர்களும் மிக்க மலர் மழையைச் சொரிந்து மலையிலுள்ள குறவர்களும்
கண்ணாற் கண்டு நிற்கும் வண்ணம் அவள் கணவனுடன் அழைத்துப் போயினர் ;
மலர்மாரி என மாறுக. வானவரும் குன்றவரும்
என்பவற்றும்மை முறையே உயர்வு சிறப்பும் இழிவு சிறப்புமாம். |
|