1. குன்றக் குரவை





மலைமகள் மகனைநின் மதிநுதல் மடவரல்
குலமலை உறைதரு குறவர்தம் மகளார்
நிலையுயர் கடவுள்நின் இணையடி தொழுதேம்
பலரறி மணமவர் படுகுவ ரெனவே ;       (16)



16
உரை
16

       மலை மகள் மகனை - மலையரசன் மகளாகிய உமையின் புதல்வனே, நின் மதிநுதல் மடவரல் குலமலை உறைதரு குறவர்தம் மகளார் - நின்னுடைய மதி போன்ற நெற்றியினையும் இளமையையும் உடைய சிறந்த மலையின்கண் வாழும் குறவர் மகளாருடைய, நிலை உயர் கடவுள் - யாவரினும் மேலாந் தன்மையையுடைய முருகனே, நின் இணையடி தொழுதேம் - நின்னுடைய இரண்டு திருவடிகளையும் வணங்கினேம், பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே - பலரும் அறியத்தக்க மணத்தினை அத்தலைவர் உடன்படுவாராகவென்று ;

       நின் மடவரலாகிய குறவர் மகளார் எனலுமாம் ; ஈண்டு மடவரல் கிழத்தி யென்னும் பொருட்டு. குலம் - சிறப்பு. மகளார் இணை அடியையும் நின் இணையடியையும் என்க. முன்னர் நிகழ்ந்தது களவாதலால் ஈண்டுப் பலரறி மணம் என்றாள் ; பலர் அறிமணம் - தமரும் சான்றோரும் விரும்பி அளிக்கும் மணம். படுதல் - உடன்படல். படுகுவரெனவே இணையடி தொழுதேம் என்க.