1. குன்றக் குரவை





குறமகள் அவளெம குலமகள் அவளொடும்
அறுமுக வொருவநின் அடியிணை தொழுதேம்
துறைமிசை நினதிரு திருவடி தொடுநர்
பெறுகநன் மணம்விடு பிழைமண மெனவே ;     (17)



17
உரை
17

        குறமகள் அவள் எம் குல மகள் அவளொடும் அறுமுக ஒருவ - ஆறுமுகத்தினையுடைய ஒப்பற்றோய் குறமகளாகிய

        அவள் எங் குடியிற் பிறந்த மகளாவாள் அவளோடும், நின் அடியிணை தொழுதேம் - நின் இரு திருவடிகளையும் வணங்கினேம், துறைமிசை நினது இரு திருவடி தொடுநர் பெறுக நன் மணம்-நீர்த் துறைக்கண்ணே நின்னிரு திருவடிகளிற் சூளுற்ற தலைவர் பிழைபடா மணத்தைப் பெற்றிடுக, விடு பிழை மணம் எனவே - குற்றமுடைய மணம் ஒழிவதாக என்று;

        அவள் எம் குல மகள் என்றது தாம் உரிமையின் வணங்குதற் கோர் தொடர்பு கூறியவாறு. எம என்பதன் கண் அகரம், அசை நிலை. ஈண்டும் இருவர் அடியையுமெனக் கொள்க. அடிதொடுதல் - அடிதொட்டுச் சூளுறுதல். முருகன் உறையுமிடம் 1"யாறும் குளனும்" என்பராகலின் 'துறைமிசை...தொடுநர்' என்றாள். தொடுநர் மணத்தைப் பெறக் கடவேம் என்றுமாம். பிழை மணம் - அயலார் மணம். விடு - விடப்படுத லென்னும் பொருட்டு. பெறுக வெனவும், ஒழிக வெனவும் இணையடி தொழுதேம் என்க. இவை எட்டும் தோழி சிறைப் புறமாகக் கூறியது; 'இறைவனை' முதலிய நான்கும் தலைவி அறத்தொடு நின்றதுமாம்.


1 முருகு. 224.