|
5
10
|
கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி
மடந்தை பொருட்டால் வருவ திவ்வூர்
அறுமுகம் இல்லை அணிமயில் இல்லை
குறமகள் இல்லை செறிதோ ளில்லை
கடம்பூண் தெய்வ மாக நேரார்
மடவர் மன்றவிச் சிறுகுடி யோரே ; (18)
|
|
கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி மடந்தை பொருட்டால் வருவது இவ் வூர் - தலைவ நீ இவ்வூர்க்கண்
கடப்ப மலர்மாலையைச் சூடி வேலினைக் கையிலேந்தி ஓர் மங்கையின்பொருட்டு வருதல் நின்னைக்
கண்டார் முருகனென்று கருதல் வேண்டியே, அறுமுகம் இல்லை - ஆயின் நினக்கு ஆறுமுகங்கள் இல்லை,
அணிமயில் இல்லை - அழகிய மயிலூர்தியும் இல்லை, குறமகள் இல்லை - மேலும் பக்கத்தே
வள்ளி இல்லை, செறிதோள் இல்லை - பன்னிரு தோள்கள் இல்லை. ஆகலின், கடம்பூண் தெய்வமாக
நேரார் மடவர் மன்ற இச் சிறுகுடியோரே - இச் சிறு குடியிலுள்ளார் நின்னை முறைமையை மேற்கொள்ளும்
கடவுளாக உடன்படார் ஆதலால் அவர் மிக அறியார்;
உடம்பிடி - வேல். கண்டார் முருகனென்று கருதல்வேண்டியே
எனச் சில சொற்கள் வருவித்துரைக்க. இவ்வூர் என்று தலைவனைக் கூறினாளுமாம். அறுமுகம்
முதலிய நான்கும் இல்லையென்று கூறித் தெய்வமாக நேரார் என்றுமாம். கடம் - கடன்; பலி.
தெய்வமாக இகழ்தல்போல அலர் அறிவித்தவாறு. |
|