1. குன்றக் குரவை

(20)

என்றீங்கு
அலர்பாடு பெற்றமை யானுரைப்பக் கேட்டுப்
புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன
மலர்தலை வெற்பன் வரைவானும் போலும்
முலையினால் மாமதுரை கோளிழைத்தாள் காதல்
தலைவனை வானோர் தமராரும் கூடிப்
பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த
நிலையொன்று பாடுதும் யாம்


20
உரை
20

        என்று ஈங்கு - என்று இவ்வாறாக, அலர் பாடு பெற்றமை யான் உரைப்பக் கேட்டு - நம் களவொழுக்கத்தின் அலர் சிறந்த தன்மையினை யான் அவனுக்குக் கூற அதனைக் கேட்டு, புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன - புலர்ந்து வாடுகின்ற உள்ளம் தன் பின்னே கிடக்கப் போன, மலர் தலை வெற்பன் வரைவானும் போலும் - பரந்த இடத்தினையுடைய வெற்பன் மணத்தலுஞ் செய்வான் போலும் ஆதலால், முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல் தலைவனை - தன்னொரு முலையானே சிறந்த மதுரை நகரினை எரிகொள்ளச் செய்தாளாய கண்ணகியின் காதலையுடைய கணவனை, வானோர் தமராருங் கூடி - தேவர் சுற்றத்தார் யாவரும் சேர்ந்து, பலர் தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த நிலை ஒன்று பாடுதும் யாம் -பலரும் வணங்கத் தக்க அக் கற்புடை யாளுக்குக் காட்டித் தந்த ஒரு தன்மையினை யாம் பாடுவோம்;

       அலர் - பலரறி பழிச்சொல். புலர் வாடு நெஞ்சம் - புலர்ந்து வாடும் உள்ளம்; 1''வரிப்புனை பந்து'' என்பதுபோல. நெஞ்சம் புறங்கொடுத்துப் போதல் - தன் உள்ளம் தலைவியின் மேலதாய்ச் சேறல். போலும், ஒப்பில் போலி.


1 முருகு. 68.