1. குன்றக் குரவை

(21)




பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால்
மாமலை வெற்பன் மணவணி வேண்டுதுமே



21
உரை
21

       பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் - தோழி யாம் பாடுவோம் வாராய், கோ முறை நீங்கக் கொடி மாடக் கூடலைத் தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் - அரசுமுறை பிழைத்தமையானே கொடி களையுடைய மாடங்கள் நிறைந்த கூடல் நகரினைத் தீயின் தன்மையுடையதாகச் செய்த கண்ணகியைப் போற்றி யாம் பாடுவோம், தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுங்கால் - அங்ஙனம் அவளை யாம் பாடுங்காலை, மா மலை வெற்பன் மணவணி வேண்டுதுமே - பெரிய மலையினையுடைய வெற்பன் நம்மை மணஞ்செய்து கோடல் குறித்துப் பராவுவோம்;

       அடுக்குகள் உவகை பற்றியன. தீ முறை செய்தல் - தீயால் முறை செய்தலுமாம்; ஆவது எரித்தொறுத்தல். வெற்பன், பெயர் மாத்திரமாய் நின்றது.