1. குன்றக் குரவை





20

தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்
ஒருமுலை இழந்த நங்கைக்குப்
பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே;       (1) 



16
உரை
22

       ஒரு முலை இழந்த நங்கைக்கு - இங்ஙனந் தெய்வமாகக் கொண்ட ஒரு முலையினை இழந்த அந் நங்கைக்கு, பெருமலை துஞ்சாது வளம் சுரக்கெனவே - பெரிய இம் மலையானது ஒழி வில்லாது பயனை மிகுப்பதாக வென்று சொல்லி, தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் - தொண்டகப் பறையினையும் சிறு பறையினையும் வாசியுங்கோள், கோடு வாய் வைம்மின் - கடமாக் கொம்புகளை வாய் வைத்து ஊதுங்கோள், கொடுமணி இயக்குமின் - ஓசை மிக்க மணியினை ஒலிக்கப் பண்ணுங்கோள், குறிஞ்சி பாடுமின் - குறிஞ்சிப் பண்ணினைப் பாடுங்கள், நறும் புகை எடுமின் - மணமுள்ள அகிற்புகை ஏந்துங்கள், பூப் பலி செய்ம்மின் - மலராகிய பலியை இடுங்கள், காப்புக்கடை நிறுமின் - சுற்று மதிலெடுத்து வாயிலும் நிறுத்துங்கள், பரவலும் பரவுமின் - போற்றுதலையும் செய்யுங்கள், விரவுமலர் தூவுமின் - பலவகையும் கலந்த பூக்களையும் அவள்மீது சொரியுங்கள் ;

       தொடுதல் - அடித்தல். சிறுபறை - துடி. பூப்பலி செய்தல் - அருச்சித்தல். காப்புக் கடை நிறுத்தல் - வாயிலின்கண் திசைத் தெய்வங்களைத் காவலாக நிறுத்தலுமாம். 1"பூப்பலி செய்து காப்புக் கடை நிறுத்தி" என்புழி இவ்வாறு கூறுவர் அரும்பத வுரையாசிரியர். பரவலும் பரவுமின் என்பது 2"இயங்கலு மியங்கு மயங்கலு மயங்கும்" என்பதுபோல நின்றது. பெருமலை வளஞ்சுரக்கென நங்கைக்குத் தொடுமின் ......... என்றியைக்க.

       கொளுச் சொல் - பாட்டின் கருத்துடைச் சொல்

 


1 சிலப். 28 : 231. 2 சிலப். 22 : 154.