|
|
ஆங்கொன்று காணாய் அணியிழாய்
ஈங்கிதுகாண்
அஞ்சனப் பூழி யரிதாரத் தின்னிடியல்
சிந்துரச் சுண்ணஞ் செறியத் தூய்த் தேங்கமழ்ந்து
இந்திர வில்லின் எழில்கொண் டிழுமென்று
வந்தீங் கிழியு மலையருவி யாடுதுமே
ஆடுதுமே தோழி யாடுதுமே தோழி
அஞ்சலோம் பென்று நலனுண்டு நல்காதான்
மஞ்சுசூழ் சோலை மலையருவி ஆடுதுமே (2)
|
|
ஆங்கு
ஒன்று காணாய் அணி இழாய் - அவ்விடத்தே யொன்றனைக் காண்பாய் அழகிய கலன்களையுடையாய்,
இங்கு இது காண் - இவ்விடத்து இதனைக் காண்பாய், அஞ்சனப் பூழி அரி தாரத்து இன் இடியல்
சிந்துரச் சுண்ணம் செறியத் தூய் - அஞ்சனத்தின் பூழ்தியும் அரிதாரத்தின் இடித்தாக்கிய
இனிய
பொடியும் சிந்துரத்தின் துகளும் செறியாநிற்கத்
தூவி, தேம் கமழ்ந்து இந்திர வில்லின் எழில்கொண்டு - மணம் வீசி வான வில்லைப் போன்று
அழகு பெற்று, இழுமென்று ஈங்கு இழியும் மலை அருவி ஆடுதுமே - இழுமென்னும் ஒலி கொண்டு வந்து
இவ்விடத்தே வீழ்கின்ற மலையருவிக்கண் நீராடுவோம், ஆடுதுமே தோழி ஆடுதுமே தோழி அஞ்சல்
ஓம்பு என்று நலன் உண்டு நல்காதான் மஞ்சு சூழ் சோலை மலையருவி ஆடுதுமே - தோழீ அஞ்சுதலை
ஒழி என்று பொய் கூறி நம் நலனை நுகர்ந்து அருளானுடைய வெள்ளிய மேகம் சூழந்த சோலையையுடைய
மலைக்கண் அருவியில் ஆடுவோம் ;
அஞ்சனம் முதலியன மலைபடு பொருள்கள்
; பன்னிறமுடைய அவற்றைத் துகளாக்கித் தூவிக்கொண்டு இழிதலால் அருவி இந்திரவில் போல்வதாயிற்று.
சேய்மையினின்று ஆங்கொன்று எனவும், அண்மையிற் சென்று ஈங்கிது எனவும் கூறினாள் என்க.
"இதுவென்றாள், கண்ணகி அங்கே வந்தவளவிலே
மழை பெய்தலால் விழுகிற அருவியை" என்பது அரும்பதவுரை.
அஞ்சல் - பிரிவிற்கஞ்சுதல். அவன்
நல்காமைக் கொடுமை செய்தும் அவன் மலையில் ஆடவேண்டிற்றே என்றாள். ஆடுதுமே ஏகாரம்,
தேற்றம். |
|