1. குன்றக் குரவை


எற்றொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைக்
கற்றீண்டி வந்த புதுப்புனல்
கற்றீண்டி வந்த புதுப்புனல் மற்றையார்
உற்றாடி னோம்தோழி நெஞ்சன்றே ;      (3)



3
உரை
3

       எற்று ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை கல் தீண்டி வந்த புதுப்புனல் - நமக்குக் கொடுமை செய்த அவருடைய மலைக்கண் கல்லில் படிந்த வந்த புதிய நீரொடு வெறுப்புக் கோடற்கு யாதொரு காரணமும் யாம் கண்டிலேம், கல் தீண்டி வந்த புதுப்புனல் மற்றையார் உற்று ஆடின் நோம் தோழி நெஞ்சு அன்றே - எனினும் கல்லிற் படிந்து வந்த புதிய புனலின் கண்ணே ஏனைய மகளிர் பொருந்தி ஆடினால் தோழீ நம் உள்ளம் வருந்தும் ; அதற்குக் காரணம் யாதோ ;

       முன்னர், நலனுண்டு நல்காதான் மலையருவி ஆடவேண்டிற்றே என்றவள் ஈண்டு அவ் வருவியொடு புலத்தற்குக் காரணமில்லை ; அவனையே புலத்தல் வேண்டுமெனக் கூறினாள். மற்றையார் என்றது அருவி ஆடுவாருள் தன்னை ஒழிய முன் அந் நீரிற் குளித்த மகளிரை. நெஞ்சு நோம் என மாறுக. அன்றே என்பது இசைநிறை ;

பின்வருவனவும் இன்ன.