|
5 |
மாநீர் வேலிக் கடம்பெறிந்து
இமயத்து
வானவர் மருள மலைவிற் பூட்டிய
வானவர் தோன்றல் வாய்வாட் கோதை
விளங்கில வந்தி வெள்ளி மாடத்து
இளங்கோ வேண்மா ளுடனிருந் தருளித்
துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும்
மஞ்சுசூழ் சோலை மலைகாண் குவமெனப்
பைந்தொடி யாயமொடு பரந்தொருங் கீண்டி
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன் |
|
மா
நீர் வேலிக் கடம்பு எறிந்து-கடலை வேலியாகவுடைய கடம்பினை வெட்டி, இமயத்து வானவர்
மருள மலை வில் பூட்டிய வானவர் தோன்றல் வாய் வாள் கோதை - இமயமலையின்கண் தேவர்களும்
மருளும் வண்ணம் மலைதலையுடைய வில்லை எழுதிய சேரர் குடியிற் றோன்றியோனாகிய தப்பாத
வாளினையுடைய செங்குட்டுவன், விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து இளங்கோ வேண்மாளுடன்
இருந்தருளி - ஒளிவிடும் நீராவியினையுடைய வெள்ளிய மாளிகையின்கண் தன் தேவியாகிய இளங்கோ
வேண்மாளுடன் அமர்ந்து, துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும் மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்
என - ஒலித்தல் ஓயா முழ வினைப்போன்று அருவி ஒலிக்கும் முகில் சூழ்ந்த சோலையினை உடைய
மலையின் வளங் காண்போமெனச் சொல்லி, பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி - பசிய
வளையலை அணிந்த தேவியோடு ஆய மகளிர் மிக்கு ஒருசேரக் குழும, வஞ்சி முற்றம் நீங்கிச்
செல்வோன் - வஞ்சிநகரின் வாயின்முற்றத் தைக் கடந்து செல்கின்றவன்;
மாநீர் - பெருநீர்; கடல்; கரிய நீருமாம்.
கடம்பெறிந்தமையும் இமயம் விற்பொறித்தமையும் 1"வலம்படு
முரசிற் சேரலாதன், முந்நீ ரோட்டிக் கடம்பறுத் திமையத்து, முன்னோர் மருள வணங்கு விற்
பொறித்து" என்பதனானறிக. மேல், 2''
கடற்கடம் பெறிந்த காவலன் வாழி'' என்புழி உரைத்தமையுங் காண்க. வானவர் - தேவர்,
சேரர். தோன்றல் - தலைவன் எனலுமாம். கோதை என்பது சேரல் என்பது போன்ற சேரர் குடிப் பொதுப்பெயர். வேண்மாள் - வேளிர் குலத்துலுதித்த பெண் என்னும் பொருட்டு. இளங்கோவேண்மாள்
செங்குட்டுவன் தேவியின் பெயர்; நன்னன் வேண்மாள், வெளியன் வேண்மாள் என்பனபோல.
வேண்மாளுடனிருந்து இளங்கோவை அருளியென நலிந்து பொருள் கோடல் சிறப்பின்றாமென்க.
அருவி முழவின் ஒலிக்குமென்பதனை, 3"முழவின்னிசை
மூரி முழங்கருவி" என வருதல்கொண்டு உணர்க. அரசனாக லாற் காண்குவமென்றான்; இனித் தேவியை
உளப்படுத்தினானாகலு மாம். ஈண்டி, ஈண்டவெனத் திரிக்க. |
1
அகம். 127. 2 சிலப். 23;
83. 3 சிந். 1193.
|
|