Untitled Document
2. காட்சிக் காதை




90
கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்றெனக் காட்டி இறைக்குரைப் பனள்போல்
தன்னாட் டாங்கண் தனிமையிற் செல்லாள்
நின்னாட் டகவயின் அடைந்தனள் நங்கையென்று

ஒழிவின் றுரைத்தீண் டூழி யூழி
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றமெனத்


87
உரை
92

       கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்று எனக் காட்டி இறைக்கு உரைப்பனள் போல் - வெற்றியினை உடைய பாண்டியனது கொடுங்கோலின் இயல்பு இஃதெனக் காட்டி நினக்குக் கூறுவாள் போன்று, தன் நாட்டு ஆங்கண் தனிமையிற் செல்லாள் நின் நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை - கண்ணகி அவ் விடத்தினின்றும் தனியாகத் தன்னாட் டிற்குச் செல்லாளாய் நினது நாட்டின்கண் சேர்ந்தனள்; என்று ஒழிவின்று உரைத்து - என்று யாவும் எஞ்சாமற் கூறி, ஈண்டு ஊழி ஊழி வழி வழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம் என - இவ்வுலகத்தில் நின் மேன்மை பொருந்திய வெற்றியா னது ஊழிதோறும் நின் வழியிலுள்ளார்க்கும் பின்னும் பின் னும் மிகுவதாக என்றியம்ப;

       பாண்டியனது கொடுங்கோலின் தன்மையைச் செங்கோலனாய நினக்கு உரைப்பாள் போன்று என்க. இது தற்குறிப்பு; இறை, முன்னிலைக்கண் வந்தது. கோவலன் கொலையுண்டது முதலியவற் றைக் கூறிய சாத்தனார் பெருங்கோப்பெண்டு மாய்ந்ததனையும் நங்கை அடைந்ததனையும் சிறப்புப் பற்றி வேறாக எடுத்துரைத்தா ரென்க. பின்னர் "மாதரோ பெருந்திரு வுறுக" "பத்தினிக் கட வுளைப் பரசல் வேண்டும்" என வருதலுங் காண்க.
.