|
Untitled Document
95
100
105
|
எம்மோ ரன்ன வேந்தர்க்
குற்ற
செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென
வல்வினை வளைத்த கொலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துக் செங்கோ லாக்கியது
மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்
பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்லெனத்
துன்னிய துன்பம் துணிந்துவந் துரைத்த
நன்னூற் புலவற்கு நன்கனம் உரைத்தாங்கு |
|
எம்
மோரன்ன வேந்தர்க்கு உற்ற செம்மையின் இகந்த சொல் செவிப் புலம் படாமுன் - எம்மை
ஒத்த அரசர்க்கு முறை வழுவுதலால் உண்டாய பழிச்சொல் சென்று செவியிற் பொருந்துதற்கு
முன், உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கு என - ஈண்டு உயிரை உடம்பினின்று நீக்கின
சொல் சென்றடைவதாக என்று உயிரை விட்டமையின், வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்
உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது - முன்னைத் தீவினை வந்துருத்து வளையச் செய்த
கோலைப் பாண்டியனது உடம்பினின்று சென்ற உயிர் வளைவு நீக்கிச் செங்கோலாகச் செய்தது,
மழை வளம் கரப்பின் வான் பேர் அச்சம் - மழையாகிய வளம் பெய்யாது மறையின் மிகப்
பெரிய அச்சம் உண்டாம், பிழை உயிர் எய்தில் பெரும்பேர் அச்சம் - யாதானு மொன்றான்
உயிர்கள் வருத்தமுறின் அத னானும் மிகப் பெரிய அச்சமுண்டாம், குடிபுரவுண்டும் கொடுங்
கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல் - குடி களைக் காத்தலை மேற்கொண்டும்
கொடுங்கோலுக்கு அஞ்சி மக்கட் கூட்டத்தினைப் புரக்கும் நல்ல அரசர் குடியில் உதித்தல்,
துன்பம் அல்லது தொழுதகவு இல் என - துன்பந் தருவல்லது போற்றத்தக்கதன்று என, துன்னிய
துன்பம் துணிந்து வந்து உரைத்த நன்னூற் புலவற்கு நன்கனம் உரைத்து- கண்ண கிக்கு உற்ற
துன்பத்தினைத் தெளிந்து வந்து கூறிய சாத்த னார்க்கு நன்கு மொழிந்து ;
1"எம்மோரன்ன.........உறுக
வீங்கென" என்றது பாண்டி யன் உட்கோள். என்று உயிரை விட்டமையின் என விரித்துரைத்துக்
கொள்க. பதி - இடம்; உடம்பு; 2"உண்ணா
நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும்" என மேல் வருவதுங் காண்க. செம்மை - செங்கோன்மை.
இகந்த - இகத்தலாலாகிய. அரசன் முறைகோடாவியல் பினனென்பான் "வல்வினை வளைத்த கோலை"
என்றான். கோல் வளைதலுற்ற அப்பொழுதே செல்லுயிர் அதனைச் செங்கோலாக்கி யது என்றான்.
முன்னர். 3"வளைகோ லிழுக்கத்
துயிராணி கொடுத் தாங், கிருநில மடந்தைக்குச் செங்கோல் காட்ட" என்றதூஉங் காண்க.
மழையும் அதனாலாய வளமும் எனலுமாம். 4"மாரி
பொய்ப்பினும் வாரி குன்றினும்...காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்" என்றார்
பிறரும். தொழுதகவு - போற்றுந்தகுதி; ஈண்டு இன்பத்தின் மேற்று, ஆட்சி எளிதன்று என்பது
5"ஒருமைந்தன் றன்குலத்துக்
குள்ளானென் பதுமுணரான், தருமந்தன் வழிச் செல்கை கடனென்று தன்மைந்தன், மருமந்தன் றேராழி
யுறவூர்ந் தான் மனுவேந்தன், அருமந்த வரசாட்சி யரிதோமற் றெளிதோ தான்" என்பதனானும்
அறியப்படும். நன்னூற் புலவன் - மணி மேகலை யாசிரியராகிய சாத்தனார். இனி 'வேந்தற்கு'
என்பது பாடமாயின் பாண்டியனுக்குண்டாகிய சொல் பிறர் செவிப் புகு தற்குமுன் பெயர்த்தமை
உறுகவெனக் கருதி எனச் செங்குட்டுவன் உட்கோளாக்குக. தொழுதகவில்லென நன்கன முரைத்தென்க.
தொழுதகவில்லென வந்துரைத்த புலவற்கு என அரும்பதவுரையா சிரியர் கூறியது சிறப்புடைத்தன்று
; என்னை? "நன்கன முரைத்து" என்பது பயனின்றா மாகலின்.
|
1
சிலப், 27: 83 2 சிலப். 27; 83.
3
சிலப். 22: 4--5. 4 புறம்,
34.
5 பெரியபு. திருவாரூர். 44.
|
|