Untitled Document
2. காட்சிக் காதை

110



மன்னவன் உரைப்ப மாபெருந் தேவி

காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து
அத்திறம் நிற்கநம் அகல்நாடு அடைந்தவிப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென


110
உரை
114

       மா பெருந் தேவி - அது கேட்ட இருங்கோ வேண் மாள், காதலன் துன்பம் காணாது கழிந்த மாதரோ பெருந்திரு உறுக வானகத்து - தன் கணவன் இறந்தமையான் உண்டாம் துனபத்தினை அறியாதே இறந்த கோப்பெருந்தேவி துறக்கத் துப் பெருஞ்செல்வம் பெறுக, அத் திறம் நிற்க -- அஃதொழிக, நம் அகல் நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என - நமது அகன்ற நாட்டினை அடைந்த இக் கற்புக் கடவுளைப் போற்றுதல் வேண்டுமெனக் கூற;

       மாபெருந்தேவி - பெருமையுடைய அரச மாதேவி; இருங்கோ வேண்மாள். மாதர் - பாண்டியன் மனைவி. கணவன் இறந்த அப் பொழுதே அவளும் இறந்தாளாகலான், காதலன்றுன்பங் காணாது கழிந்த மாதர் என்றாள். அத்திறம் நிற்க - அது கூற வேண்டா என்ற படி. ஈண்டுத் தேவி கூறிய விடை ஒட்ப நுட்பமுடையதாதல் அறிந்து இன்புறுதற்குரியது. இருவரும் வியக்கு நலத்தோரே, எனினும் தம்மால் வழிபடற்குரியாள் பத்தினித் தெய்வமாம் என்பது விடை யின் கருத்தாகும்.