|
Untitled Document
120
|
நூலறி புலவரை நோக்க
ஆங்கவர்
ஒற்கா மரபிற் பொதியி லன்றியும்
விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக்
கற்கால் கொள்ளினுங் கடவு ளாகும்
கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும்
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்தெனப் |
|
ஆங்கவர்
- அவ் வமைச்சர், ஒற்கா மரபின் பொதி யில் அன்றியும் - ஒடுங்காத முறைமையினையுடைய
பொதியி லின்கண் அன்றியும், வில் தலைக்கொண்ட வியன் பேரிமயத்து - நமது வில்லைத்
தன்னிடத்துடைய மிகப் பெரிய இமயவரைக் கண், கல் கால் கொள்ளினும் - கல்லினை அடிச்செய்து
கொண்டா லும், கடவுள் ஆகும் - அது கடவுள் ஆம், கங்கைப் பேர் யாற்றி னும் காவிரிப்
புனலினும் தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என - அங்ஙனம் கால் கொண்ட கல்லைக் கங்கையாற்றிடத்தும்
காவிரியிடத்தும் நீர்ப்படை செய்தல் தகுதியுடைத்தாம் எனக் கூற;
ஒற்கா மரபு - அழியாத தன்மை ; "பொதியி
லாயினும் இமய மாயினும் ..... ஒடுக்கங் கூறார்" என்றமை காண்க. பொதியில் அன்றியும்
- பொதியிற்கல் கொள்வதன்றியும். இமயக் கல்லிற்குக் கங்கையும் பொதியிற் கல்லிற்குக்
காவிரியுங் கொள்க ; எதிர்நிர னிறை. நீர்ப்படை - நீரிற்படுத்துத் தூய்மை செய்தல்.
அவர் தக வுடைத்தெனக் கூறவென்க. |
|