2. காட்சிக் காதை





130
புன்மயிர்ச் சடைமுடிப் புலரா வுடுக்கை
முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளரொடு பெருமலை யரசன்
மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக்
கடவு ளெழுதவோர் கல்தா ரானெனின்


126
உரை
130

       புன் மயிர்ச் சடைமுடிப் புலரா உடுக்கை - சிவந்த மயிர்களையுடைய சடைமுடியினையும் ஈரம் புலராத உடையினை யும், முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து - மூன்று புரியானா கிய பூணூலணிந்த மார்பினையும் மூன்று எரியாகிய செல்வத் தினையும் உடைய, இரு பிறப்பாளரொடு தேவ இருடிக ளோடே, பெருமலை அரசன் - பெரிய மலையரசன், மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக் கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின் - இளமைக் காலத்தேயே மாட்சிமைப் பட்ட மிக்க சிறப்பினையுடைய கற்புத் தெய்வத்தின் படிமஞ் செய்தற்கு ஓர் கல் தாராதொழிவனாயின்;

       புல் - ஓர் நிறம் ; புல்லை யென வழங்கும். புலரா வுடுக்கை யினைப் 1"புலராக் காழகம் புலர வுடீஇ" என்பதனானுமறிக. முத்தீ - ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி. இருபிறப்பு - உபநயனத்திற்கு முன்னொரு பிறப்பும் பின்னொரு பிறப்புமாகிய இரு பிறப்பு. மகட்டருவார் பார்ப்பாரோடு கொடுத்தல் கருதி இரு பிறப்பாளரொடு கல்தாரானாயின் என்றார். இருபிறப்பாளர் - ஈண் டுத் தேவ இருடிகள். கண்ணகி. 2"சிறுமுதுக் குறைவி" யாக லான், மடவதின் மாண்ட பத்தினி என்றார். எழுதல் - இயற்றுதல். இருபிறப்பாளரொடு என்றமையானும், பின் மகட்பாற் காஞ்சி கூறுதலானும் கல்லினை மலையரையன் மகளாகக் கருதினான் என்க.


1 முருகு. 184. 2 சிலப் : 16. 68.