2. காட்சிக் காதை




20
கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை
நாகம் திலகம் நறுங்கா ழாரம்
உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து
மதுகரம் ஞிமிறொடு வண்டினம் பாட

நெடியோன் மார்பி லாரம் போன்று
பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை
இடுமண லெக்கர் இயைந்தொருங் கிருப்பக்.


17
உரை
23

       கோங்கம் வேங்கை தூங்கு இணர்க் கொன்றை நாகம் திலகம் நறுங்காழ் ஆரம் - கோங்கும் வேங்கையும் தொங்கும் பூங்கொத்துக்களையுடைய கொன்றையும் சுர புன்னை யும் மஞ்சாடியும் நல்ல வயிரங்கொண்ட சந்தனமும் எனப்பட்ட மரங்கள், உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து - உதிர்த்த பூக்களின் பரப்பினால் நீர் கரந்து ஒழுகும், மதுகரம் ஞிமி றொடு வண்டினம் பாட-மதுகரத்தோடும் ஞிமிறோடும் வண்டுக் கூட்டங்கள் இசை பாட, நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெருமலை விலங்கிய பேரியாற்றடைகரை - திருமாலின் மார் பின்கண் மாலை போலப் பெரிய மலையினைக் குறுக்கிட்டுச் செல் லும் பேர்யாறு என்னும் யாற்றின் கரைக்கண், இடுமணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப - யாறு குவித்த எக்கர் மண லிடத்தே ஒன்றுகூடிப் பொருந்தி இருக்க;

       உதிர்பூ - உதிர்ந்த பூ எனலுமாம். ஒளித்து என்பதனைத் தன் வினையாக்குக; பிறவினையாக உரைப்பினும் அமையும். மதுகரம், ஞிமிறு, வண்டு இவை வண்டின் பிரிவு. புனலொளித்து ஒழுகும் பேர் யாறு எனவும், ஆரம் போன்று விலங்கிய பேர் யாறு எனவும் கூட்டுக. பாடவென்னும் எச்சம் விலங்கியவென்னும் பெயரெச்ச வினைகொண்டு முடியும். பூம்பரப்பின் புனல் ஒளித்தலால் வண்டி னம் பாட எனலுமாம். பூக்கள் புனலை மறைத்தமையானும் மலை யைக் குறுக்கிட்டுச் சேறலானும் பேர் யாறு ஆரம் போன்றிருந்த தென்க. மலையை நெடியோனாக்குக. இயைந்து ஒருங்கிருப்ப - தேவியோடும் ஆயத்தோடும் பொருந்தி இருக்கவென்க; மூவருங் கூடி யிருப்பவென்றல் முன்பின் மாறுபாடாகும்.