|
Untitled Document
145
|
குடைநிலை வஞ்சியும்
கொற்ற வஞ்சியும்
நெடுமா ராய நிலைஇய வஞ்சியும்
வென்றோர் விளங்கிய வியன்பெரு வஞ்சியும்
பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று வஞ்சியும்
குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும்
வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன்
புட்கைச் சேனை பொலியச் சூட்டிப்
பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்தென்
வாய்வாள் மலைந்த வஞ்சிசூ டுதுமெனப் |
|
குடை
நிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும் - குடை நாட்கோளும் கொற்ற வஞ்சியும், நெடு மாராயம்
நிலைஇய வஞ் சியும் - நெடிய மாராயம் நிலைபெற்ற வஞ்சியும், வென்றோர் விளங்கிய வியன்
பெரு வஞ்சியும் - வெற்றி கொண்டோர் விளங் கிய சிறந்த பெருவஞ்சியும், பின்றாச்
சிறப்பின் பெருஞ் சோற்று வஞ்சியும் - தாழாச் சிறப்பினையுடைய பெருஞ்சோற்று வஞ்சி
யும், குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும் - குறைவில்லாப் பெருமையினையுடைய கொற்ற
வள்ளையும், வட்கர் போகிய வான் பனந் தோட்டுடன் புட்கைச் சேனை பொலியச் சூட்டி -
இடையே முரிதலில்லாத சிறந்த பனந்தோட்டோடு மேற் கோளையுடைய தானை விளங்க அணிவித்து,
பூவா வஞ்சிப் பொன் நகர்ப் புறத்து என் வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என - அழகிய
வஞ்சி நகரின் புறத்தே எனது பகைவரைப் பொருத வினை வாய்த்த வாளிற்கு வஞ்சி மாலை சூடுவேம்
என்று கூற;
குடைநிலை வஞ்சி - குடைநாட் கோடல்.
1"குடையும் வாளும் நாள்கோள்"
என்னுஞ் சூத்திர வுரையில், 'நாள்கொளலாவது நாளும் ஓரையுந் தனக்கேற்பக் கொண்டு செல்வுழி
அக் காலத்திற்கு ஓர் இடையூறு தோன்றியவழித் தனக்கு இன்றியமையாதனவற்றை அத் திசை
நோக்கி அக் காலத்தே முன்னே செல்ல விடுதல்' எனவும், 2"இயங்குபடை
யரவம்" என்னுஞ் சூத்திரவுரைக்கண், "மாராயம் பெற்ற நெடுமொழி" என்பதற்கு 'வேந்தனாற்
சிறப்பெய்தியவதனால் தானேயாயினும் பிறரேயாயினும் கூறும் மீக்கூற்றுச் சொல்; சிறப்பாவன
ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதல்' எனவும், "பிண்ட
மேய பெருஞ்சோற்று நிலை" என்பதற்கு 'வேந்தன் போர்தலைக் கொண்ட பிற்றைஞான்று போர்
குறித்த படையாளரும் தானும் உடனுண்பான் போல்வதோர் முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த
உண்டியைக் கொடுத்தல் மேயின பெருஞ்சோற்று நிலை' எனவும், " குன்றாச் சிறப்பிற் கொற்ற
வள்ளை" என்பதற்கு 'வேந்தனது குறையாத வெற்றிச் சிறப்பினாற் பகைவர் நாடழிதற் கிரங்கித்
தோற்றோனை விளங்கக் கூறும் வள்ளைப் பாட்டு (வள்ளை-உரற்பாட்டு)' எனவும் நச்சினார்க்கினியர்
எழுதிய உரைகள் அறியத்தக்கன. "கொற்ற வள்ளை" என்பதற்குத் 'தோற்ற கொற்றவன் அளிக்கும் திறை' என்பர் இளம்பூரணர். குடை நாட் கோள் தொல்காப்பியத்து உழிஞைத் திணையிற்
கூறி யிருப்ப, வெண்பா மாலையில் வஞ்சி உழிஞை என்னும் இருதிணைக் கண்ணும் கூறப்பட்டுளது.
இளங்கோவடிகள் வஞ்சியிற் குடைநிலை கூறியது பன்னிரு படலத்தைத் தழுவியதாகும். மற்றும்,
3"வாளுங் குடையும் மயிர்க்கண்
முரசும், நாளொடு பெயர்த்து" என்புழி உரைத்தனவுங்காண்க. இனி, புறப்பொருள் வெண்பா மாலையில்
குடைநிலைவஞ்சி, கொற்றவஞ்சி, மாராயவஞ்சி, பெருவஞ்சி, பெருஞ்சோற்றுவஞ்சி, கொற்றவள்ளை
என்பவற்றிற்கு முறையே கூறப்பட்டுள்ள இலக்கணங்கள்;
4"பெய்தாமஞ்
சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக்
கொய்தார் மன்னவன் குடைநாட்
கொண்டன்று"
"வையகம் வணங்க வாளோச் சினனெனச்
செய்கழல் வேந்தன் சீர்மிகுத்
தன்று"
"மறவேந்தனிற் சிறப்பெய்திய
விறல்வேலோர் நிலையுரைத்தன்று"
"முன்னடையார் வளநாட்டைப்
பின்னருமுடன் றெரிகொளீஇயன்று"
"திருந்தார் தெம்முனை தெறுகுவ
ரிவரெனப்
பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று"
"மன்னவன் புகழ்கிளந்
தொன்னார்நா டழிபிரங்கின்று"
என்பன. வட்கர் என்பதனை வட்கார்
என்பதன் குறுக்கலெனக் கொண்டு, பகைவர் போதற்குக் காரணமான என்றுரைத்தலுமாம்; 5"வட்கர்
போகிய வளரிளம் போந்தை" என்பதன் உரை காண்க. பூட்கை - மேற்கோள்; புட்கையென விகாரமாயிற்று.
பூவாவஞ்சி யென்பது வஞ்சி நகர்க்கு வெளிப்படை; 6"பூவாவஞ்சியுந்
தருகு வன்" 7"பூவா வஞ்சியிற்
பூத்த வஞ்சி" என்பனவுங் காண்க. பூவா வஞ்சி - கருவூர் என்பது அரும்பதவுரை. என் எனவும்
ஆடுதுமென வும் ஒருமை பன்மை மயங்கி வந்தன.
வேந்தன் ஒருவன், போர் செய்யப் போங்கால்,
தனக்குரிய அடையாளப் பூக்களோடே தான் மேற்கொண்ட திணைக்குரிய மலர்களை விரவித்
தொடுப்பித்துத் தான் சூடிக்கோடலும், தன் வீரர்க் குச் சூட்டுதலும் மரபு. ஆகலான், வஞ்சித்திணையைச்
சார்ந்த குடை நிலைவஞ்சி முதலியவற்றுக்குரிய வஞ்சிப்பூவினைப் பனந்தோட்டுடன் சூட்டிச்
சூடுதும் என்றான் செங்குட்டுவன்.
இங்ஙனம் குடைநிலைவஞ்சி . . . கொற்றவள்ளை
இவற்றைப் பனந்தோட்டுடன் சூட்டுவேன் என்றானாயினும் இத் துறையெல்லாம் முற்ற முடிப்பேன்
எனக் கூறியதாகக் கருத்துக் கொள்க.
|
1
தொல். பொருள், 68. 2 தொல். பொருள்,
63.
3 சிலப். 5 ; 91-2. 4
புற. வெ. 3:3, 7, 11, 22, 23, 8.
5 புறம், 99. 6
புறம், 31. 7 சிலப். 26 ; 50.
|
|