Untitled Document
2. காட்சிக் காதை

கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது



156
உரை
159

       கொங்கணர் கலிங்கர் கொடுங் கரு நாடர் - கொங் கணரும் கலிங்கரும் கொடிய கன்னடரும், பங்களர் கங்கர் பல் வேல் கட்டியர் - வங்களரும் கங்கரும் பல வேலினையுடைய கட்டியரும், வட ஆரியரொடு வண்தமிழ் மயக்கத்து உன் கடமலை வேட்டம் என் கட்புலம் பிரியாது - வடக்கண் ஆரியரும் ஆகிய இவரொடு வளவிய தமிழ்ப் படை கைகலந்த செருக்களத்தில் உனது யானைவேட்டை என் கண்ணினின்றும் விலகாது;

       
கொங்கணர் முதலாயினார், தமிழ் நாட்டைச் சார்ந்து வடக்கிலுள்ள ஒவ்வொரு நாட்டின் பகுதியை ஆண்ட சிற்றரசர்கள். 1நன்ன னேற்றை நறும்பூ ணத்தி, துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி "என்பதனால் கங்கரும் கட்டியரும் தமிழ் நாட்டின் பகுதி யினரெனலுமாம். ஆரியர் வேறு கூறினமையின் கொங்கணர் முத லாயினார் ஆரியரல்லரென்பது பெற்றாம். கொங்கணர் முதலாயினாருடன் கூடிய ஆரியரோடு தமிழ்ப் படை கைகலந்த போரில் என்க. தமிழ் - தமிழ்ப்படை; 2"தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானம்" என்புழியும் தமிழ் இப் பொருட்டாதல் காண்க. உன் கடமலை வேட்டம் --நீ பகைவருடைய யானைப்படையை வேட்டமாடியது என்க; நீ நின் யானையை விட்டபடி யென்றுமாம்.


1 அகம். 44. 2 புறம். 18.