|
Untitled Document
160
|
கங்கைப் பேர்யாற்றுக்
கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம் |
|
கங்கைப்
பேர் யாற்றுக் கடும்புனல் நீத்தம் எங்கோ மகளை ஆட்டிய அந் நாள் - கங்கையாற்றின்
விரையுஞ் செல வினையுடைய நீர்ப் பெருக்கில் எமது கோமகளை நீராட்டிய அக் காலத்து, ஆரிய
மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு ஒரு நீயாகிய செரு வெங் கோலம் - ஆயிரம் ஆரிய வரசர்க்கு
நீ ஒருவனுமே எதிராக நின்று செய்த கொடிய போர்க்கோலத்தினை, கண் விழித்துக் கண்டது
கடுங்கண் கூற்றம் - தன் கண்ணைத் திறந்து நோக்கியது அஞ்சாமையையுடைய கூற்றமன்றோ;
எம் கோமகள் என்றது செங்குட்டுவன்
தாயை. செங்குட்டுவன் தன் தாயைக் கங்கையில் நீராட்டுதற்கு அழைத்துச் சென்றனன் என்க.
ஈரைஞ்ஞூற்றுவர் - எண்ணிறந்தோர் என்றபடி. உயிர் கவருந் தொழிலுடைய கூற்றமும் இவன்
பகைவரைக் கொன்று குவித் தலைக் கண்டு வியந்து நின்றதென்பான் 'கண்விழித்துக் கண்டது
கடுங்கட் கூற்றம்' என்றான். |
|