Untitled Document
2. காட்சிக் காதை



175
நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா
வம்பணி யானை வேந்தர் ஒற்றே

தஞ்செவிப் படுக்குந் தகைமைய வன்றோ
அறைபறை யென்றே அழும்பில்வே ளுரைப்ப


173
உரை
177

       நாவல்அம் தண் பொழில் நண்ணார்ஒற்று நம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா - இந் நாவலந் தீவில் பலவிடங்களிலு முள்ள பகைவர்களின் ஒற்றுக்கள் நமது காவலையுடைய வஞ்சி நகரின் வாயிலிடத்தை நீங்காது நிற்பன ஆதலால், வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே தம் செவி படுக்கும் தகைமைய அன்றோ - அவ் வொற்றுக்களே கச்சு அணிந்த யானையினையுடைய பகை மன்னர் செவிக்கு அறிவிக்குந் தன்மையையுடையனவாம், அறை பறை என்றே அழும்பில் வேள் உரைப்ப - ஆகலான், வட திசைச் செலவு குறித்து ஈண்டுப் பறையறைதலே அமையும் என அழும்பில் வேள் என்பான் கூற;

       பொழில் - உலகம், தீவு, ஒற்று - ஒற்றர்; ஒற்றியறிபவர். ஒற்று என்ற சொற்கேற்பப் பிரியாவென அஃறிணை முடிபு கூறினார். ஒற்று வேந்தர்தஞ் செவிப்படுக்குமென்க; நின்றாங் குரைப்பினும் அமையும். அழும்பில் வேள் செங்குட்டுவன் அமைச்சருள் ஒருவன் போலும், மேலும், 1"அழும்பில் வேளோ டாயக் கணக்கரை"

       என்பர். அழும்பில் - ஓரூர் என்பது 2"அழும்பி லன்ன வறாஅ யாணர்" 3"மான விறல்வே ளழும்பி லன்ன, நாடு" என்பவற்றா னறியப்படும். அழும்பில் - பாண்டி நாட்டூர் என்பர் களிற்றியானை நிரையின் குறிப்புரைகாரர்.


1 சிலப். 28; 205. 2 அகம். 44. 3 மதுரைக், 344--5.