2. காட்சிக் காதை




40





45





50





55
யானைவெண் கோடும் அகிலின் குப்பையும்
மான்மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும்
சந்தனக் குறையுஞ் சிந்துரக் கட்டியும்
அஞ்சனத் திரளும் அணியரி தாரமும்

ஏல வல்லியும் இருங்கறி வல்லியும்
கூவை நூறுங் கொழுங்கொடிக் கவலையும்
தெங்கின் பழனும் தேமாங் கனியும்
பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்
காயமும் கரும்பும் பூமலி கொடியும்

கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும்
பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்
ஆளியி னணங்கும் அரியின் குருளையும்
வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும்
குரங்கின் குட்டியுங் குடாவடி உளியமும்

வரையாடு வருடையும் மடமான் மறியும்
காசறைக் கருவும் மாசறு நகுலமும்
பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்
கானக் கோழியும் தேன்மொழிக் கிள்ளையும்
மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டாங்கு


37
உரை
55

       யானை வெண்கோடும் அகிலின் குப்பையும் - யானை யின் வெள்ளிய கொம்புகளையும் அகிற் கட்டையின் குவியலை யும், மான் மயிர்க் கவரியும் - மான் மயிராகிய வெண்சாமரையை யும், மதுவின் குடங்களும் - தேன் குடங்களையும், சந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும் - சந்தனக் கட்டைகளையும் சிந்து ரக் கட்டிகளையும், அஞ்சனத்திரளும் அணி அரிதாரமும் - நீலக் கல்லின் திரளையும் அழகிய கத்தூரியையும், ஏல வல்லியும் இருங் கறி வல்லியும்-ஏலக்கொடிகளையும் கரிய மிளகு கொடிகளையும், கூவை நூறும் - கூவைக் கிழங்கின் நீற்றினையும், கொழுங் கொடிக் கவலையும்-கொழுவிய கவலைக்கொடியின் கிழங்குகளை யும், தெங்கின் பழனும் தேமாங் கனியும் - தெங்கம் பழங்களை யும் இனிய மாவின் பழங்களையும், பைங்கொடிப் படலையும் - பச்சிலை மாலையையும், பலவின் பழங்களும் - பலாப் பழங்களை யும், காயமும் - வெள்ளுள்ளியையும், கரும்பும் - கரும்பினையும், பூ மலி கொடியும் - பூங்கொடியினையும், கொழுந் தாள் கமுகின் செழுங் குலைத் தாறும் - கொழுவிய அடியினையுடைய கமுகினது செழுமையான காய்க் குலையாகிய தாற்றினையும், பெருங் குலை வாழையின் இருங் கனித் தாறும் - பெரிய தாற்றினையுடைய வாழையின் பெரிய பழம் நிறைந்த குலையினையும், ஆளியின் அணங்கும் அரியின் குருளையும் வாள் வரிப் பறழும் மதகரிக்களப மும் குரங்கின் குட்டியும் குடாவடி உளியமும் - ஆளி சிங்கம் புலி யானை குரங்கு கரடி என்பவற்றின் குட்டிகளையும், வரை யாடு வருடையும் - மலையில் துள்ளி விளையாடும் வருடை மானை யும், மட மான் மறியும் காசறைக் கருவும் - இளமை பொருந் திய மான் குட்டியையும் கத்தூரிக் குட்டியையும், ஆசு அறு நகுலமும் - குற்றமற்ற கீரியையும், பீலி மஞ்ஞையும் - ஆண் மயிலினையும், நாவியின் பிள்ளையும் - புழுகு பூனையின் குட்டியை யும், கானக் கோழியும் தேன் மொழிக் கிள்ளையும் - காட்டுக் கோழியையும் இனிய மொழி பேசும் கிளியினையும், மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு - குன்றக் குறவர் தம் தலைமீது சுமந்து வந்து நின்று ;

       மான்மயிர்க் கவரியும் என்பதற்குக் கவரிமான் மயிரும் எனமாற் றிப் பொருள் உரைப்பினும் அமையும், குறை - குறைக்கப்பட்டது; கட்டை. கூவை நூறு - கூவைக்கிழங்கின் மா; 1 "நூறொடு குழீஇயின கூவை," 2"மாவை யிஞ்சியுங் கூவைச் சுண்ணமும்" என வருவனவுங் காண்க. பைங்கொடி - பச்சிலைக் கொடி ; எல்லாவற்றிலும் பசுத் திருத்தலிற் பச்சிலையென்று பெயர் பெற்றது ; சினைவினையை முதன் மேலேற்றிப் பைங்கொடி யென்றார் ; முருகாற்றுள் 3"பைங்கொடி" என்பதற்கு நச்சினார்க்கினியரெழுதிய உரை காண்க. படலை - இலை மாலை. பெருங்குலை வாழைக்கு அடை. குடாவடி - வளைந்த அடி களையுடையது; கரடி. வருடை - மலையிற் பாய்ந்து விளையாடும் ஒரு வகை மான்; மலையாடு என்றுங் கூறுவர்; இஃது எட்டுக் கால்களை உடையதென்றும், இதன் கால்கள் வளைந்து
முதுகின்மேல் இருப்பன என்றும் கூறப்படுகின்றது; 4"சிலம்புபாய் வருடையொடு," 5"மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள், வரைவாழ் வருடை வன்றலை மாத்தகர்," 6"எண்கால் வருடையும்" என்பன காண்க. அணங்கு, குருளை, பறழ், களபம், குட்டி, உளியம், மறி, கரு, பிள்ளை எனப் பலவகை இளமை மரபுப் பெயர்களை அடிகள் ஏற்ற பெற்றி அமைத்திருக்குந் திறன் அறிந்து மகிழ்தற்குரியது. கொண்டு வந்து நின்றது என விரித்துரைக்க. தெவ்வர் போலத் தலைமிசைக்கொண்டு வந்து நின்றென்க.


1 மலைபடு. 137. 2 பெருங், 1. 51: 23.
3 முருகு, 149 - 3. உரை. 4 சிந், 1238. பே.உரை
5 மலைபடு, 502-3. 6 தொல், பொருள், 587.