2. காட்சிக் காதை

55





60
மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டாங்கு

ஏழ்பிறப் படியேம் வாழ்கநின் கொற்றம்
கான வேங்கைக் கீழோர் காரிகை
தான்முலை இழந்து தனித்துய ரெய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானவர் போற்ற வானகம் பெற்றனள்

எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ
நின்னாட் டியாங்கள் நினைப்பினும் அறியேம்
பன்னூ றாயிரக் தாண்டுவா ழியரென


55
உரை
63

       ஆங்கு - அவ்விடத்தே, ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம்-ஏழு பிறவியின்கண்ணும் நினக்கு யாம் அடிமை யாவேம் நினது அரச நீதி நீடு வாழ்வதாக என்று சொல்லி, கான வேங்கைக் கீழ் ஓர் காரிகை-காட்டகத்து வேங்கை மரத் தடியில் ஓர் நங்கை, தான் முலை இழந்து தனித் துயர் எய்தி- தனது ஒரு முலையினை இழந்து பிறரடையாத துன்பத்தை அடைந்த, வானவர் போற்ற மன்னொடும் கூடி வானவர் போற்ற வானகம் பெற்றனள் - தேவர்கள் துதிக்கத் தன் கணவனோடு கூடி அத் தேவர்கள் ஏத்தத் துறக்கம் புக்கனள், எந் நாட்டாள் கொல் யார் மகள் கொல்லோ - அவள் எந்நாட்டினளோ எவர் புதல்வியோ, நின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்-நினது நாட்டிடத்து யாங்கள் எண்ணத்தினும் இஃதொப்ப தொன்றனை அறிந்திலேம், பன்னூறு ஆயிரத்து ஆண்டு வாழியர் என - பல நூறாயிரம் ஆண்டுகள் வாழ்வாயாகவென வாழ்த்திய அளவில்;

       பிறப்பு - வழி முறையுமாம்; வழிவழி அடியேம் என்றவாறு. கொற்றம்-வென்றியுமாம். என்று சொல்லி என ஒரு சொல் வரு விக்க. பின்னர் வரும் வானவர் போற்ற என்பதற்குச் சேரர் போற்ற எனலும் அமையும்; இதற்குப் போற்ற என்பது எதிர்கால மாகும். நின்னாட்டுக் கான வேங்கைக் கீழ் என்றுமாம். நினைப்பினும் என்னும் உம்மை கண்ணாற் கண்டறியாமையே அன்றி என எச்சப் பொருள் தந்தது.