குடக்கோக்
குட்டுவன் கொற்றம் கொள்க என - குட திசைக் கோவாகிய செங்குட்டுவன் வென்றி பெறுக
என்று, ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன் சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த - திருவனந்தபுரத்தில்
யோகநித்திரையி லமர்ந்த நெடுமாலின் சேடத்தைக் கொணர்ந்து நின்று சிலர் துதிக்க,
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின் - கங்கையைப்
பொதிந்துள்ள சிவந்த சடை யினையுடைய சிவபெருமானது அழகிய திருவடிகளைத் தன் மணி முடியின்மீது
னவத்திருந்தமையான், ஆங்கது வாங்கி அணி மணிப் புயத்துத் தாங்கினனாகித் தகைமையில்
செல்வுழி - திரு மாலின் திருச்சேடத்தை வாங்கி அழகிய மணித்தோளின்மீது தாங்கினவனாய்ப்
பெருந் தகுதியுடன் செல்லுமிடத்து;
"ஆடகமாடம்
-திருவனந்தபுரம்; இரவிபுர மென்பாருமுளர்" என்பர் அரும்பதவுரை யாசிரியர். 1"ஆடகமாடத்
தரவணைக் கிடந் தோன்" எனப் பின் வருவதும் அறியற்பாலது. சேடம் - தெய்வத் திற்குப்
படைத்த உணவு, மலர் முதலியவை; பிரசாதம் எனவும் படும். சிவபிரான் திருவடியை முடியிற்
கொண்டிருத்தலின் அதனோ டொப்ப இதனையும் தரித்தற் கொருப்படானாகி இதனை வாங்கிப்
புயத்திலே தரித்தனன் என்றார். புயத்திலே தாங்கின னென்றமை யால் சேடமாவது மாலை
யென்பது பெற்றாம். சேவடி யென்றது சேவடிப் பிரசாதமுமாம். செங்குட்டுவன் சிவமென்னும்
செம் பொருளையே முழுமுதற் பொருளாகக் கொண்டு வேறு தெய்வத்தை அதனோடொப்ப நினையாத
செந்நெறிச் செல்வன் என்பதும், எனி னும் வேறு தெய்வ வழிபாட்டையும் மதித்தொழுகும்
பெருந்தகை யென்பதும் இதனாற் போதரும்.
|