3,கால்கோள் காதை
95

100
இயங்குபடை அரவத் தீண்டொலி இசைப்ப
விசும்பியங்கு முனிவர் வியன்நிலம் ஆளும்
இந்திர திருவனைக் காண்குது மென்றே
அந்தரத் திழிந்தாங் கரசுவிளங் கவையத்து

மின்னொளி மயக்கும் மேனியொடு தோன்ற
மன்னவன் எழுந்து வணங்கிநின் றோனைச்
செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்
மலயத் தேகுதும் வான்பே ரிமய

நிலயத் தேகுதல் நின்கருத் தாகலின்
அருமறை யந்தணர் ஆங்குளர் வாழ்வோர்
பெருநில மன்ன பேணல்நின் கடனென்று
ஆங்கவர் வாழ்த்திப் போந்ததற் பின்னர்92
உரை
104

       இயங்கு படை அரவத்து ஈண்டொலி இசைப்ப - திரிகின்ற படைகளின் முழக்கத்தாற் கூடிய பேரொலி சென் றிசைத்தலால், விசும்பியங்கு முனிவர் வியல்நிலம் ஆளும் இந்திர திருவனைக் காண்குதும் என்றே - விண்ணகத் தியங்கும் முனிவர்கள் அகன்ற பூமியையாளும் இந்திரச் செல்வம் பெற்ற மன்னனைக் காண்போம் என்று, அந்தரத்து இழிந்தாங்கு அரசு விளங்கு அவையத்து - வானினின்றும் இறங்கி அரசு பொலியும் அவையின்கண், மின்னொளி மயக்கும் மேனியொடு தோன்ற - மின்னலின் ஒளியையும் மயங்கச் செய்யும் பேரொளி பொருந்திய திருமேனியுடன் தோன்ற, மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை - எழுந்து வணக்கஞ்செய்து நின்றோனாகிய அரசனை நோக்கி, செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ கேளாய் - சிவந்த சடையினையுடைய சிவ பெருமான் திருவருளினாலே வஞ்சிப்பதி விளங்குமாறு உதித்த சேரனே கேட்பாயாக, மலயத்து ஏகுதும் - யாங்கள் பொதியின் மலைக்குச் செல்கின்றோம், வான்பேர் இமய நிலயத்து ஏகுதல் நின் கருத்து ஆகலின் - நீ மிகப் பெரிதாகிய இமயத்தின்பாற் செல்ல எண்ணினை ஆதலால், அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர் - அங்கே அரிய மறைகளை யுணர்ந்த அந்தணர் வாழ்வாருளர், பெருநில மன்ன பேணல் நின்கடன் என்று - பெரிய நிலவுலகினையாளும் அரசே அன்னோரை நலியாது காத்தல் நினது கடமையாகும் என்று கூறி, ஆங்கவர் வாழ்த்திப் போந்ததற் பின்னர் - அம் முனிவர்கள் வாழ்த்திச் சென்ற பின்பு ;

      
ஒலித்தலால் அறிந்து காண்குதுமென்று இழிந்தாரென்க. வணங்கி நின்றான் அங்ஙனம் நின்றவனை நோக்கியென விரித் துரைக்க. இமயமாகிய நிலயத்து. நிலயத்து - நிற்கிறவிடத்து என்பது அரும்பதவுரை. அந்தணர் ஆங்கு வாழ்வோருளர் அவர்களைக் காத்தல் கடனென்று கூறியென்க.