3,கால்கோள் காதை

105

110

115
வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்கெனக்

கொங்கணக் கூத்தரும் கொடுங்கரு நாடரும்
தங்குலக் கோதிய தகைசால் அணியினர்
இருள்படப் பொதுளிய சுருளிருங் குஞ்சி
மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர்
வடம்சுமந் தோங்கிய வளர்இள வனமுலைக்

கருங்கயல் நெடுங்கட் காரிகை யாரோடு
இருங்குயில் ஆல இனவண் டியாழ்செய
அரும்பவிழ் வேனில் வந்தது வாரார்
காதல ரென்னும் மேதகு சிறப்பின்
மாதர்ப் பாணி வரியொடு தோன்றக்105
உரை
115

       வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என - கடல் சூழ்ந்த நிலவுலகினையாளும் சேரர் பெருமான் வாழ்க என்று கூறிக்கொண்டு, கொங்கணக் கூத்தரும் கொடுங் கருநாடரும் - கொங்கண நாட்டுக் கூத்தரும் கருநாடரும், தம் குலக்கு ஒதிய தகைசால் அணியினர் - தம் மரபிற்குக் கூறப்பட்ட தகுதி மிக்க ஒப்பனையுடையராய், இருள்படப் பொதுளிய சுருள் இருங் குஞ்சி - இருளுண்டாகுமாறு நெருங்கிய சுருண்ட கரிய குஞ்சியில், மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர் - மயங்குமாறு பரப்பப்பட்ட தழைத்த மாலையை யுடையராய், வடம் சுமந்து ஓங்கிய வளர்இள வன முலைக் கருங்கயல் நெடுங்கண் காரிகை யாரோடு - மணி வடங்களைச் சுமந்து உயர்ந்த அழகிய இளங் கொங்கைகளும் கயல்மீன் போன்ற கரிய பெரிய கண்களு முடையராகிய மகளிருடன், இருங்குயில் ஆல இனவண்டு யாழ் செய - கரிய குயில்கள் பாட வண்டினங்கள் யாழினொலியைச் செய்ய, அரும்பு அவிழ் வேனில் வந்தது வாரார் காதலர் என்னும் - அரும்புகள் அலரும் பருவமாகிய இளவேனில் வந்தது நம் காதலரோ இன்னும் வாரார் என்னும், மேதகு சிறப்பின் மாதர்ப்பாணி வரியொடு தோன்ற - பெருஞ் சிறப்பினையுடைய அழகிய வரிப்பாட்டுடன் தோன்ற ;

      வீங்குநீர் - மிக்கநீர் ; கடல். கருநாடர் - கருநாடராகிய கூத்தர். குலக்கு, அத்துச்சாரியை தொக்கது. குஞ்சி - ஆடவர் தலை மயிர். ஒலியல் மாலை - தழைத்த மாலை. 'வேனில் வந்தது ; காதலர் வாரார்' என்று தலைவி தோழிக்குக் கூறும் பொருளமைந்த பாட்டென்க. வரிப்பாணியென மாறுக. குயிலால, வண்டுயாழ் செய என்பன வேனிற்கு அடை. கூத்தரும் கருநாடரும் காரிகையா ரோடு கூடி வரிப் பாணியொடு தோன்ற வென்க.