|
130
135
140
|
நாடக மகளிர்ஈ ரைம்பத்
திருவரும்
கூடிசைக் குயிலுவர் இருநூற் றெண்மரும்
தொண்ணூற் றறுவகைப் பாசண் டத்துறை
நண்ணிய நூற்றுவர் நகைவே ழம்பரும்
கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற் றிரட்டியும்
கடுங்களி யானை ஓரைஞ் ஞூறும்
ஐயீ ராயிரங் கொய்யுளைப் புரவியும்
எய்யா வடவளத் திருபதி னாயிரம்
கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்
சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர்ஈ ரைஞ்ஞூற் றுவரும்
சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே
வாயி லோரென வாயில்வந் திசைப்ப |
|
நாடகமகளிர்
ஈரைம்பத்திவரும் - ஆடல் மகளிர் நூற்று இருவரும், கூடிசைக் குயிலுவர் இருநூற்று எண்மரும்-
இசைகூடும் குயிலுவக் கருவியாளர் இருநூற்று எண்மரும், தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத்துறை
நண்ணிய நூற்றுவர் நகைவேழம்பரும் - தொண்ணூற்றாறு வகையினையுடைய சமய சாத்திரத் துறையிற்
கற்றுத் தெளிந்த நகையைத் தரும் வேழம்பர் நூற்றுவரும், கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற்று
இரட்டியும் - தாமரை வடிவாகிய கொடிஞ்சியினையுடைய பெரிய தேர் நூறும், கடுங்களி யானை
ஓரைஞ்ஞூறும் -தறு கண்மையும் மதக்களிப்புமுடைய யானை ஐந்நூறும், ஐயீராயிரம் கொய்யுளைப்
புரவியும் - கொய்யப்பட்ட பிடரிமயிரினை யுடைய பதினாயிரங் குதிரைகளும், எய்யா வடவளத்து
இருபதினாயிரம் கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும் - வேறோரிடத்தும் கண்டறியாத வடதிசை
வளங்களையுடையனவாயும் சரக்கின் பெயர்அளவு முதலியன பொறிக்கப்பட்ட பொதிகளை யுடையனவாயும்
அணி செய்யப்பெற்ற இருபதினாயிரம் வண்டிகளும், சஞ்சயன் முதலாத் தலைக்கீடுபெற்ற கஞ்சுக
முதல்வர் ஈரைஞ்ஞூற்றுவரும் - சஞ்சயனை முதலாகக் கொண்ட மயிர்க் கட்டினைப் பெற்ற சட்டையிட்ட
தலைவர் ஆயிரவரும், சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே - மிக வுயர்ந்த விற்கொடியையும்
செவ்விய கோலையும் உடைய மன்னவ, வாயிலோர்என வாயில் வந்து இசைப்ப - வாயிலின்கண்
வந்துளார் என்று வாயில் காவலர் வந்துகூற ;
குயிலுவர் - தோற்கருவி துளைக் கருவி நரப்புக்
கருவி உருக்குக் கருவியாளர். தொண்ணூற்றறுவகைப்பாசண்டத்துறை என்பதனைப் 1
"பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு" என்புழி உரைத்தமையானு மறிக. நகை வேழம்பர்
- விதூடகர். எய்யா-அறியப் படாத ; 2
"எய்யாமையே அறியாமையே" என்பது தொல்காப்பியம். வடவளம் - வடக்கிற் பாகுடம் ; வடதிசையினின்றும்
போந்த திறைப் பொருள். சஞ்சயன் - தூதரிற் றலையாயவன். தலைக்கீடு - அரசரளிக்கும்
தலைப்பாகை. திணைவிரவி வாயிலோரென உயர்திணை முடிபு பெற்றது. வாயில் - காவலாளர்.
|
1
சிலப் : 9 : 15 2 தொல், உரி.
44.
|
|