|
10
|
வியம்படு தானை விறலோர்க்
கெல்லாம்
உயர்ந்தோங்கு வெண்குடை யுரவோன் கூறும்
இமையத் தாபதர் எமக்கீங் குணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பா லொழிகுவ தாயி னாங்கஃது
எம்போல் வேந்தர்க் கிகழ்ச்சியுந் தரூஉம |
|
வியம்படுதானை
விறலோர்க்கு எல்லாம் உயர்ந்தோங்கு வெண்குடை உரவோன் கூறும்-பெருமை மிக்கு விளங்குகின்ற
வெண்கொற்றக் குடையினையுடைய சேரர் பெருந்தகை ஏவல் பெற்ற சேனைகளின் தலைவர்க்கெல்லாம்
கூறாநிற்பன், இமை யத் தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய - புண்ணியத் துறையாடு மாறு இமயத்தினின்றும்
போந்த முனிவர் எமக்கு இப்பொழுது அறிவித்த, அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி -
நிரம் பாத உயிர் வாழ்க்கையினையுடைய வடபுல மன்னரின் வாய் மொழிகள், நம்பால் ஒழிகுவதாயின்
ஆங்கஃது எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம் - நம்மிடத்துக் கிடப்பதொரு சொல்லாயின்
அம் மொழி எம்மை யொத்த சோழர் பாண்டியர் கட்கு இகழ்ச்சியையுந் தரும் ஆகலின் ;
வியம் - ஏவல் ; முன்னர் "1வினைகடைக்
கூட்ட வியங்கொண் டான்" என்றதுங் காண்க. உயர்ந்தோங்கு, ஒருபொருளிருசொல். அமையா
வாழ்க்கையாவது 2செம்புற்றீயல் போலும்
ஒருபகல் வாழ்க்கை. அரைசர் வாய்மொழியாவது, "3தென்றமிழ்
நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து, மின்றவழு மிமய நெற்றியில் விளங்கு விற்புலி
கயல்பொறித்தநாள், எம்போலு முடிமன்னர் ஈங்கில்லை போலும்" என்றது. நம்பால் ஒழிகுவதாயின்
- அச்சொல் அவரையே சென்று தாக்காது நம்மிடத்துக் கிடப்பதாயின் என்ற படி. வேந்தர்க்கு
இகழ்ச்சியும் தரூஉம் - வேந்தர் எம்மை யிகழ்தலை யும் உண்டாக்கும் ; அன்றி, எமக்கேயன்றி
அவர்க்கும் இகழ்ச்சி யைத் தரும் என்றலுமாம்.
|
1
சிலப். 9 : 78. 2
புறம். 50. 3
சிலப் 29. உரைப்.
|
|