|
Untitled Document
145
150
155 |
செங்கோல் வேந்தன்
றிருவிளங் கவையத்துச்
சஞ்சயன் புகுந்து தாழ்ந்துபல ஏத்தி
ஆணையிற் புகுந்தஈ ரைம்பத் திருவரொடு
மாண்வினை யாளரை வகைபெறக் காட்டி
வேற்றுமை யின்றி நின்னொடு கலந்த
நூற்றுவர் கன்னருங் கோற்றொழில் வேந்தே
வடதிசை மருங்கின் வானவன் பெயர்வது
கடவு ளெழுதவோர் கற்கே யாயின்
ஓங்கிய இமையத்துக் கற்கால் கொண்டு
வீங்குநீர்க் கங்கை நீர்ப்படை செய்தாங்கு
யாந்தரு மாற்றல மென்றன ரென்று
வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் வாழ்கென |
|
செங்கோல்
வேந்தன் திருவிளங்கு அவையத்து - சேரர் பெருமானது மலர்மகள் பொலியும் அவையின்கண்,
சஞ்சயன்புகுந்து தாழ்ந்து பல ஏத்தி - சஞ்சயன் எய்தி வணங்கிப் பலவாறாகத் துதித்து,
ஆணையில் புகுந்த ஈரைம்பத் திருவரொடு மாண் வினையாளரை வகைபெறக் காட்டி-அரசனாணைப்படி
வந்த முற்கூறிய நாடகமகளிர் நூற்றிருவருடன் சிறந்த தொழில் வல்லாரையும் வகைபெறுமாறுகாட்டி,
வேற்றுமையின்றி நின்னொடு கலந்த நூற்றுவர் கன்னரும் கோற்றொழில் வேந்தே-செங்கோலரசே
நின்னுடன் மாறுபாடின்றி நட்புக்கொண்ட நூற்றுவர் கன்னரும், வடதிசை மருங்கின் வானவன்
பெயர்வது-சேரர் தலைவன் வடக்கு நோக்கிச் செல்வது, கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின் -
தெய்வம் அமைத்தற்கு ஒரு கற்கொணரும் பொருட் டேயாயின், ஓங்கிய இமயத்துக் கற்கால்
கொண்டு - உயரிய இமயமலையின்கண் கற்கால் கொண்டு, வீங்கு நீர்க் கங்கை நீர்ப் படை
செய்து - பெருகிவரும் நீரினையுடைய கங்கை யாற்றில் அக் கல்லினை நீராட்டி, ஆங்கு யாம்
தரும் ஆற்றலம் என்றனர் என்று - அங்கேயே கொணர்ந்து தரும் வலியுடையம் யாம் என்று மொழிந்தனர்
என்று கூறி, வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என - கடல்சூழ்ந்த வுலகினையாள்கின்ற
ஏந்தலே வாழ் வாயாகவென ஏத்த ;
மாண்வினையாளர் என்றது குயிலுவர் முதலாயினாரை.
கல்லினை யாமே கொணர்ந்து தரும் ஆற்றலமாகலின் அதன் பொருட்டுச் சேரர் பெருமான் வருதல்
வேண்டா என்றனர். சஞ்சயன் காட்டி என்றனரென்று கூறி வாழ்கென வாழ்த்த என்க. நூற்றுவர்
கன்னர் - செங்குட்டுவற்கு நட்பாளராய வடநாட்டரசர். சஞ்சயன் - நூற்றுவர் கன்னரால்
விடுக்கப்பட்ட தூதர் தலைவன். |
|