3,கால்கோள் காதை

160

165
அடல்வேன் மன்னர் ஆருயி ருண்ணும்
கடலந் தானைக் காவல னுரைக்கும்
பால குமரன் மக்கள் மற்றவர்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி

அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனக்
கூற்றங் கொண்டிச் சேனை செல்வது
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன
வங்கப் பெருநிரை செய்க தாமெனச்

சஞ்சயன் போனபின் கஞ்சுக மாக்கள156
உரை
166

       அடல் வேல் மன்னர் ஆருயிர் உண்ணும் கடலந்தானைக் காவலன் உரைக்கும் - வெற்றி பொருந்திய வேற்படை யினையுடைய பகையரசர்தம் அரிய உயிரை உண்ணும் கடல் போன்ற பெரிய சேனையையுடைய அரசன் கூறுகின்றான் ; பாலகுமரன் மக்கள் மற்றவர் காவா நாவிற் கனகனும் விசயனும் - பாலகுமரன் புதல்வராய் கனகனும் விசயனுமென்பார் நாவினைக் காவாதவராய், விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி - தமிழரசர் வலியறியாத புதிய வேந்தர்களுடன் கூடி, அருந் தமிழ் ஆற்றல் அறிந்திலராங்கென - அரிய தமிழ்த்திறனை அறியாராய் இகழ்ந்துரைத்தனரென்று, கூற்றம் கொண்டு இச்சேனை செல்வது - கூற்றுவனை அழைத்துக்கொண்டு இப் படை செல்கின்றது, நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி - இதனை நூற்றுவர் கன்னர்க்குக் கூறி, ஆங்கு - அங்கே, கங்கைப் பேர் யாறு கடத்தற்கு ஆவன வங்கப் பெருநிரை செய்க தாம் என -கங்கைப் பெரு நதியைக் கடத்தற்கு வேண்டுவனவாகிய மிகுதியான ஓடங்களை அமைத்திடுக என்றுரைக்க, சஞ்சயன் போன பின் - சஞ்சயன் அங்கு நின்றுஞ் சென்ற பின்னர் ;

       பாலகுமரன் மக்கள் கனகனும் விசயனும் என்னும் அவர் அறிந் திலரென வென்க. காவாநாவின் என்றமையால் அறியாது இகழ்ந் தனரெனக் கொள்க. 1 "யாகாவா ராயினும் நாகாக்க" என்றார் வள்ளுவனாரும். தமிழாற்றல் - தமிழரசர் ஆற்றல். கூற்றம் பின் வர இச் சேனை செல்வது என்க. கூற்றக் கொண்டி என்பது பாட மாயின் கூற்றத்தை யொக்கும் கொண்டிச் சேனை யென்க; கொண்டி - கொள்ளை. தாம், அசை; அவர்கள் செய்கவென் றுரை யென்ன விரித்துரைத்தலுமாம். வானவன் பெயர்வது கற்கேயாயின் யாம் தரும் ஆற்றலம் என்று கூறி விடுத்தார்க்கு இச் சேனை செல்வது கற்கால் கொள்வது தலைக்கீடாக அருந்தமிழாற்றல் அரியாதோரை அறியப் பண்ணுதற்கெனக் கூறுக வென்றான். சேனை செல்வதெனச் சேனை மேலிட்டுக் கூறினான்; தனக்கு அவர் நிகரன்மையின்.


1 குறள். 127.