3,கால்கோள் காதை
185
உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன்
சித்திரன் சிங்கன் றனுத்தரன் சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னவ ரெல்லாம்
தென்றமி ழாற்றல் காண்குதும் யாமெனக்

கலந்த கேண்மையிற் கனக விசயர்
நிலந்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர182
உரை
187

       உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்தி ரன் சிங்கன் தனுத்திரன் சிவேதன் (என்ற)-, வடதிசை மருங் கின் மன்னவர் எல்லாம் - வடநாட்டிலுள்ள அரசரனைவரும், தென்றமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என - தென்றமிழின் ஆற்றலை யாம் காண்பேம் என்று, கலந்த கேண்மையில் கனக விசயர் - கனக விசயருடன் ஒன்றிய நட்புடையராய், நிலந் திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர - பூமியைத் திரைக்கின்ற பெருஞ் சேனையுடன் போருக்கு எதிர்த்துவர;

       கேண்மையினாலே கனகவிசயர் தானையொடு ஒத்து மேல் வர என்றுமாம். திரைத்தல் - சுருக்குதல்; நிலவகலத்தைத் தன்னுள்ளே யடக்குதல்; 1 "நிலந்திரைக்குங் கடற்றானை" என்பதன் உரை காண்க.


1 புறம். 96.