|
200
|
சிலைத்தோ ளாடவர்
செருவேற் றடக்கையர்
கறைத்தோன் மறவர் கடுந்தே ரூருநர்
வெண்கோட் டியானையர் விரைபரிக் குதிரையர்
மண்கண் கெடுத்தவிம் மாநிலப் பெருந்துகள்
களங்கொள் யானைக் கவிழ்மணி நாவும்
விளங்குகொடி நந்தின் வீங்கிசை நாவும்
நடுங்குதொழி லொழிந்தாங்கு ஒடுங்கியுள் செறியத |
|
சிலைத்தோள்
ஆடவர் செருவேல் தடக்கையர் - வில்லினைத் தோளிற்கொண்ட வீரர் போர்புரியும் வேலினைக்
கையிற்கொண்ட வீரர், கறைத்தோல் மறவர்-கரிய கிடுகினைத் தாங்கிய வீரர், கடுந்தேர்
ஊருநர் - கடிய செலவினையுடைய தேரினைச் செலுத்துவோர், வெண்கோட்டு யானையர் விரைபரிக்
குதிரையர் - வெள்ளிய கொம்புகளையுடைய யானையைக் கடாவு வோர் விரைந்த செலவினையுடைய
குதிரையைத் தூண்டுவோர் என்னும் இவர்கள் செலவினால், மண்கண் கெடுத்த இம் மா நிலப்
பெருந்துகள் - நிலவுலகின் கண்ணைமூடிய இந்தப் பெரிய பூமியின் மிகுதியான துகள், களங்கொள்
யானைக் கவிழ்மணி நாவும் - போர்க்களத்தை யடைந்த யானைகளிற் கட்டிய கவிழ்ந்த மணிகளின்
நாவும், விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும் - விளங்கும் கொடியுடன் கட்டிய மிக்க
ஒலியை யுடைய சங்குகளின் நாவும், நடுங்கு தொழில் ஒழிந்து ஆங்கு ஒடுங்கி உள்செறிய -
அசையுந் தொழிலொழிந்து ஒடுங்குமாறு அவற்றினுள்ளே நிறைய;
என்போர் செலவினால் என வருவித்துரைக்க.
உயிர்களின் கண்ணை மறைத்ததனை 'மண்கண் கெடுத்த' என்றார். மாநிலத்தி னின்றும் எழுந்த
துகளென்க. 'கொடி நந்து-கொடியும் சங்கும் முகத்துக் கட்டுவர்போலும்' என்றார் அரும்பதவுரையாசிரியர்;
விளங்கொளி நந்தின் எனவும் பாடமுளது, 'சங்கின் நா' என்றார்; ஒலித்தல்பற்றி. ஒடுங்கி
- ஒடுங்கவெனத் திரிக்க. பெருந்துகள் உள் செறியவென்க. |
|