3,கால்கோள் காதை15
வடதிசை மருங்கின் மன்னர்த முடித்தலைக்
கடவு ளெழுதவோர் கற்கொண் டல்லது
வறிது மீளுமென் வாய்வா ளாகில்

செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற்
குடிநடுக் குறூஉங் கோலே னாகென


13
உரை
18

       வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக் கடவுள் எழுதவோர் கற்கொண்டு அல்லது - வடநாட்டு அரசர்களின் முடியணிந்த தலைமீது தெய்வம் அமைத்தற்குரிய ஒருகல்லை ஏற் றிக்கொண் டன்றி, வறிது மீளும் என் வாய்வாள் ஆகில் - என் னுடைய வடிக்கப்பட்ட வாள் வறிதே திரும்புமாயின், செறி கழல் புனைந்த செருவெங் கோலத்துப் பகையரசு நடுக்காது - நெருங்கிய வீரக் கழலணிந்த கொடிய போர்க்கோலங் கொண்ட மாற்றரசனை நடுங்கச் செய்யாது, பயங்கெழு வைப்பில் குடி நடுக்குறூஉம் கோலேன் ஆகென - பயன்மிகுந்த நன்னாட்டி லுள்ள குடிமக்களை நடுங்கச் செய்யுங் கொடுங்கோன்மை யுடையவனாவேன் என உரைக்க ;

       தன் செய்கையை வாளின்மேலேற்றிக் கூறினான். செருவெங் கோலத்தால் எனலுமாம். வைப்பு - நாடு. "1குடிபழி தூற்றுங் கோலே னாகுக" என நெடுஞ்செழியன் வஞ்சினங் கூறினமையுங் காண்க ; "2குடிபழி தூற்றுங் கோலனு மல்லன்" என்பதும் அறி யற்பாலது. ஆகவென என்பது விகாரமாயிற்று ; ஆகு - ஆவேன் எனலுமாம்.


1 புறம். 71.  2 சிலப். 23 : 34.