3,கால்கோள் காதை

215

220
அடுந்தேர்த் தானை ஆரிய வரசர்
கடும்படை மாக்களைக் கொன்று களங்குவித்து
நெடுந்தேர்க் கொடுஞ்சியுங் கடுங்களிற் றெருத்தமும்
விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட
எருமைக் கடும்பரி யூர்வோன் உயிர்த்தொகை

ஒருபக லெல்லையின் உண்ணு மென்பது
ஆரிய வரசர் அமர்க்களத் தறிய
நூழி லாட்டிய சூழ்கழல் வேந்தன்
போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை
ஓங்கிருஞ் சென்னி மேம்பட மலைய211
உரை
220

       அடுந் தேர்த் தானை ஆரிய அரசர் கடும்படை மாக் களை - போரில்வல்ல தேர்ப் படைகளையுடைய வடபுலமன்ன ரின் கொடிய படைவீரர்களை, கொன்று களங் குவித்து நெடுந் தேர்க் கொடுஞ்சியும் கடுங்களிற்று எருத்தமும் விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட-உயர்ந்த தேர் மொட்டுகளும் கொடிய களிறுகளின் பிடரியும் விரைந்த செலவினையுடைய குதிரைகளின் முதுகும் பாழாகுமாறு கொன்று களத்திற் குவித்து, எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை ஒரு பகல் எல்லையின் உண்ணும் என்பது- எருமைக் கடாவாகிய விரைந்த குதிரையை ஊருவோனாகிய கூற்றுவன் உயிர்த்தொகு திகளை ஒரு பகல் அளவிலேயே உண்ணுவன் என்பதனை, ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய - ஆரிய மன்னர் தம் போர்க்களத் தின்கண்ணே அறியுமாறு, நூழில் ஆட்டிய சூழ்கழல் வேந் தன்-கொன்று குவித்த வீரக் கழலணிந்த மன்னவன், போந்தை யொடு தொடுத்த பருவத் தும்பை - பனம் பூவினுடன் தொடுக் கப்பட்ட செவ்வித் தும்பை மாலையை, ஓங்கிருஞ் சென்னி மேம் பட மலைய - உயர்ந்த பெரிய முடியின்கண் சிறப்ப அணிந்திட;

      பாழ்படவும் உண்ணுமென்பதறிவும் கொன்று குவித்து நூழி லாட்டிய வேந்தன் என மாறுக. நூழிலாட்டினன் என முடித்து, ஆட்டிய வேந்தனென்றெடுக்க. கூற்றுவன் உண்ணுமென்பதறிய என்னுங் கருத்தினை "மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமை யும், நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய" என்பதனானுமறிக. நூழிலாட்டு - தும்பைத்திணையின் துறைகளுளொன்று; 1 "களங் கழுமிய படையிரிய, உளங்கிழித்த வேல் பறித்தோச் சின்று" என் பது அதனிலக்கணம்; 2 "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன், மெய்வேல் பறியா நகும்" என்பதுங் காண்க. இனி, 3 நூழிலாட்டி என்பதற்குத் தூசிப் படையைக் கொன்று குவித்து எனப் பொரு ளுரைப்பர் நச்சினார்க்கினியர். போந்தையொடு தும்பை மலைந்தமை 4 "தோடார் போந்தை தும்பையொடு முடித்துப், பாடுதுறை முற் றிய" எனப் பின்னருங் கூறப்படும்.


1 பு. வெ. தும்பை--16. 2 குறள். 774.
3 மலைபடு. 87. 4 சிலப். 27: 45.--6