3,கால்கோள் காதை

235

240
கச்சை யானைக் காவலர் நடுங்கக்
கோட்டுமாப் பூட்டி வாட்கோ லாக
ஆளழி வாங்கி அதரி திரித்த
வாளே ருழவன் மறக்களம் வாழ்த்தித்
தொடியுடை நெடுங்கை தூங்கத் தூக்கி

முடியுடைக் கருந்தலை முந்துற ஏந்திக்
கடல்வயிறு கலக்கிய ஞாட்புங் கடலகழ்
இலங்கையி லெழுந்த சமரமுங் கடல்வணன்
தேரூர் செருவும் பாடிப் பேரிசை
முன்றேர்க் குரவை முதல்வனை வாழ்த்திப்

பின்றேர்க் குரவை பேயாடு பறந்தலை231
உரை
241

       கச்சை யானைக் காவலர் நடுங்க - கழுத்திடு கயிற் றினையணிந்த யானைகளையுடைய அரசர்கள் நடுங்குமாறு, கோட்டுமாப் பூட்டி-கோட்டினையுடைய களிறுகளை எருதாகப் பூட்டி, வாள் கோலாக - வாளே கோலாக, ஆள் அழி வாங்கி அதரி திரித்த - ஆளாகிய போரை இரங்கவிட்டுக் கடாவிட்ட, வாள் ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தி - வாளாகிய ஏரினை யுடைய உழவனாகிய செங்குட்டுவனது போர்க்களத்தை வாழ்த்தி, தொடியுடை நெடுங்கை தூங்கத் தூக்கி - வீர வளை யணிந்த பெரிய கைகளை அசையுமாறு தூக்கி, முடியுடைக் கருந்தலை முந்துற ஏந்தி - முடியணிந்த கரிய தலையை முற்பட ஏந்திக்கொண்டு, கடல்வயிறு கலக்கிய ஞாட்பும் கடல் அகழ் இலங்கையில் எழுந்த சமரமும் கடல்வணன் தேர்ஊர் செருவும் பாடி - கடல் போலும் நீல நிறமுடைய கண்ணன் கடலின் வயிற்றைக் கலக்கிய போரும் கடலை அகழியாகவுடைய இலங்கையிற் புரிந்த போரும் பாண்டவர்பொருட்டுத் தேரூர்ந்த போரும் ஆகிய மூன்றையும் பாடி, பேரிசை முன்தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி - பெரும் புகழுடைய முதல்வனை முன்றேர்க் குரவையிலே பாடி வாழ்த்தி, பின்தேர்க் குரவை பேய் ஆடு பறந்தலை - பின்றேர்க் குரவையிலே பேய் ஆடுகின்ற மறக்களத்தில்;

      கோல் - தாற்றுக்கோல், ஆள் - வீரர்கள். அழி-நெற்போர். அதரி திரித்தல் - கடாவிடுதல். கோட்டுமாப் பூட்டி ... வாளேருழ வன் என்றது உருவகம்; 1 "யானை யெருத்தின் வாண்மட லோச்சி, யதரி திரித்த" என்றார் பிறரும். கடல்வயிறு கலக்கிய ஞாட்பு - பாற்கடல் கடைந்த காலத்தில் வானவர்க்கும் தானவர்க்கு மிடையே நிகழ்ந்த போர்; இம் மூவகைப்போரும் வருங்காதையினும் குறிக்கப் படுதல் காண்க. மாயவன் நிகழ்த்திய இம் மூன்று செருவையும் இவன்மே லேற்றிப் பூவை நிலையாற் பாடிற்று. பேய் வாழ்த்தித் தூக்கி ஏந்திப் பாடி வாழ்த்தி ஆடு பறந்தலை யென்க. முன்றேர்க் குரவை - பகையரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப் பாலே தேர்த்தட்டிலே நின்று போர்த் தலைவரோடு கைபிணைந்தாடு வது; பின்றேர்க் குரவை - வென்ற அரசன் தேரின்பின்னே கூளிச் சுற்றம் ஆடுவது; 2 "தேரோர், வென்ற கோமான் முன்றேர்க் குரவையும், ஒன்றிய மரபிற்பின்றேர்க் குரவையும்" என்புழி நச்சினார்க் கினியர் உரைத்த வுரை காண்க; தேரின்முன் பேயாடியது என்றும், தேரின்பின் விறலியரும் வயவரும் ஆடியது என்றும் முறையே இவற்றினிலக்கணங் கூறுவர் 3 வெண்பாமாலையுடையார்; இளங்கோவடிகள் ஈண்டுக் கூறியன முன்னவற்றை யொத்திருத்தல் அறியற்பாலது.


புறம். 370. 2 தொல், பொருள். 76. 3 பு. வெ. வாகை: 7, 8,