|
245
|
முடித்தலை யடுப்பிற்
பிடர்த்தலைத் தாழித்
தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு
மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்டச்
சிறப்பூண் கடியினஞ் செங்கோற் கொற்றத்து
அறக்களஞ் செய்தோன் ஊழி வாழ்கென
மறக்கள முடித்த வாய்வாட் குட்டுவன |
|
முடித்தலை
அடுப்பில் பிடர்த்தலைத் தாழி-முடி சூடிய தலையாகிய அடுப்பில் யானையின் தலையாகிய தாழியில்
தொடித்தோள் துடுப்பில் துழைஇய ஊன்சோறு - தொடி யணிந்த தோளாகிய துடுப்பினால் துழாவி
அடப்பட்ட ஊனாகிய சோற்றை, மறப்பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட-மறம் பொருந்திய
பேய் மடையன் பதமறிந்து உண்பிக்க, சிறப்பூண் கடியினம் செங்கோற் கொற்றத்து அறக்களம்
செய்தோன் ஊழி வாழ்க என-சிறந்த உணவினையுண்ட பேயினங்கள் முறை வழுவா வென்றியினாலே
அறக்களஞ் செய்தோன் ஊழிதோறும் வாழ்க என வாழ்த்த. மறக்களம் முடித்த வாய்வாட் குட்டுவன்-
போர்க்களச் செய்கையை முடித்த தப்பாத வாளினையுடைய செங்குட்டுவன்;
பிடர்த்தலை-
பிடரினையுடைய யானைத்தலை; 1 "கொற்றவாண்
மறவ ரோச்சக் குடரொடு, தலையுங் காலும், அற்றுவீ ழானைப் பானை யடுப்பினி லேற்று மம்மா"
என்றார் செயங்கொண்டாரும். பேய் வாலுவன் - பேயாகிய மடையன் ; பேய்க்குச் சோறிடும்
மடையன். வயின் - பதம் ; 2 "வளைக்கை
மகடூஉ வயினறிந் தட்ட" என்பதன் உரை காண்க. 3
"ஆண்டலை யணங்கடுப்பின், ... தொடித்தோட்கை துடுப்பாக, வாடுற்ற வூன்சோறு, நெறியறிந்த
கடிவாலுவன், அடியொதுங்கிப் பிற்பெயராப், படையோர்க்கு முருகயர" என்றார் காஞ்சிப்
புலவர். சிறப்பூண் - விருந்தூண். கடி - பேய். தமக்கு உணவளித்தமையின் 'அறக்களஞ் செய்தோன்'
என்றன. இது கள வழி கூறிற்று; 4 "களவழித்
தேரோர் தோற்றிய வென்றியும்" என் பதற்கு நச்சினார்க்கினியர் உரைத்தவுரை காண்க.
முடித்தனன் அங்ஙனம் முடித்த குட்டுவன் என அறுத்துரைக்க.
|
1
கலிங், களம் 47. 2
பெரும்பாண். 304.
3 மதுரைக். 29-38. 4
தொல். பொருள். 76.
|
|