3,கால்கோள் காதை

வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த
பல்வேற் றானைப் படைபல ஏவிப்
பொற்கோட் டிமயத்துப் பொருவறு பத்தினிக்
கற்கால் கொண்டனன் காவல னாங்கென்.251
உரை
254

      வில்லவன் கோதையொடு வென்று வினைமுடித்த பல் வேல் தானைப்படை பல ஏவி - வில்லவன் கோதை யென்னும் அமைச்சனுடன் போரினை வென்று முடித்த பல வேற்படைகளை யுடைய சேனை பலவற்றை ஏவி, பொற்கோட்டு இமயத்து - பொன்னாலாய சிமையத்தினையுடைய இமய மலையின்கண், பொருவறு பத்தினிக் கல்கால் கொண்டனன் காவலன் ஆங்கென் - ஒப்பற்ற பத்தினிக்கடவுட்குக் கற்செய்தலை அடிக்கொண் டான் அரசன் என்க.

       வில்லவன் கோதை - படைத் தலைவனுமாம். கால்கொண்ட னன் - தொடங்கினான் ; கடவுள் வடிவெழுதத் தொடங்கினான் என்றபடி , குட்டுவனாகிய காவலன் காமினெனச் சொல்லி ஏவி இமயத்துக் கல் கால் கொண்டனனென்க.

நிலைமண்டில வாசிரியப்பா

கால்கோட் காதை முற்றிற்று.