3,கால்கோள் காதை

25

30
ஆறிரு மதியினுங் காருக வடிப்பயின்று

ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து
வெந்திறல் வேந்தே வாழ்கநின் கொற்றம்
இருநில மருங்கின் மன்னரெல் லாம்நின்
திருமலர்த் தாமரைச் சேவடி பணியும்
முழுத்தம் ஈங்கிது முன்னிய திசைமேல்

எழுச்சிப் பாலை யாகென் றேத்த


25
உரை
31

       ஆறிருமதியினும் காருக வடிப் பயின்று - பன்னீ ரிராசிகளிலும் உள்ள கோட்களின் நிலையைக் கற்று, ஐந்து கேள் வியும் அமைந்தோன் எழுந்து - திதி முதலிய ஐந்தின் கல்வியும் அமையப்பெற்ற நிமித்திகன் எழுந்து, வெந்திறல் வேந்தே வாழ்க நின் கொற்றம் - வெவ்விய திறலையுடைய மன்னவனே நின் வென்றி வாழ்வதாக, இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் - பெரிய பூமியின்கணுள்ள அரசர் யாவரும், நின் திருமலர்த் தாமரைச் சேவடி பணியும் முழுத்தம் ஈங்கிது-அழகிய தாமரை மலர் போன்ற நின் சிவந்த திருவடிகளை வணங்கும் நற்பொழுதாகும் இக்காலம், முன்னிய திசைமேல் எழுச்சிப்பாலையாக என்று ஏத்த - நீ குறித்த திசையின்மேற் போருக்கு எழு வாயாக என்று கூறித் துதிக்க ;

      
மதி - ஈண்டு இராசியைக் குறிக்கின்றது. காருக அடி - கிரக நிலை. மேடம் முதலிய பன்னிரண்டிருக்கைகளிலும் கோட்கள் நிற் கும் நிலையை அறிந்தென்க. ஐந்து - திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்பன ; இவை ஐந்தங்கம் எனப்படும் ; இனி ஐந்து என்பது கோள்களின் நட்பு, ஆட்சி உச்சம், பகை, நீசம் எனலுமாம். முழுத்தம் - முகூர்த்தம் ; பொழுது. பணியும் முழுத் தம் - பணிதற்கேதுவாகிய முழுத்தம். எழுச்சிப்பாலை யாகென - எழுதற்பான்மையை யாக வென்ன.