4. நீர்ப்படைக் காதை





வடபே ரிமயத்து வான்றரு சிறப்பிற்
கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின்
சினவேன் முன்பிற் செருவெங் கோலத்துக்
கனக விசயர்தங் கதிர்முடி யேற்றிச்ன


1
உரை
4

       வடபேரிமயத்து - வடக்கின் கண்ணதாகிய பெரிய இமயமலையிலே, வான்தரும் சிறப்பின் கடவுட் பத்தினி - துறக்கந் தருஞ் சிறப்பினையுடைய பத்தினிக்கடவுட்கு, கற்கால் கொண்ட பின்-கல்லில் வடிவெழுதிய பின்னர், சின வேல் முன்பிற் செரு வெங் கோலத்துக் கனக விசயர்தம் கதிர்முடி ஏற்றி- அச்சிலையைச் சினம் பொருந்திய வேல் வலியுடைய வெவ்விய போர்க் கோலத்துடன் அகப்பட்ட கனக விசயருடைய ஒள்ளிய முடி சூடிய தலையின்கண் ஏற்றி;

       வான்தரும் - மழையைத் தரும் என்றுமாம். முடி - முடியை யுடைய தலை. அதனை யேற்றி யென்க.