4. நீர்ப்படைக் காதை

5





10

செறிகழல் வேந்தன் றென்றமி ழாற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை யுண்ட வொன்பதிற் றிரட்டியென்று
யாண்டும் மதியும் நாளுங் கடிகையும்

ஈண்டுநீர் ஞாலங் கூட்டி யெண்கொள
வருபெருந் தானை மறக்கள மருங்கின்
ஒருபக லெல்லை யுயிர்த்தொகை யுண்ட
செங்குட் டுவன்றன் சினவேற் றானையொடு


5
உரை
13

       செறிகழல் வேந்தன் - செறிந்த வீரக் கழலையுடைய சேரவேந்தன், தென்றமிழ் ஆற்றல் அறியாது மலைந்த ஆரிய மன்னரை - தமிழன் ஆற்றலை அறியாது பொருத ஆரியவர சரை, செயிர்த் தொழில் முதியோன் செய்தொழில் பெருக உயிர்த்தொகை உண்ட - கொல்லுந் தொழிலையுடைய கூற்றுவனது தொழில் மிகுமாறு உயிர்க்கூட்டத்தை யுண்ட போர்கள், ஒன்பதிற்று இரட்டியென்று யாண்டும் மதியும் நாளும் கடிகையும் ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள - பதினெட்டாகிய யாண்டிலும் திங்களிலும் நாளிலும் நாழிகையிலும் முடிந்தன வென்று கடல்சூழ்ந்த உலகத்தோர் கூட்டியெண்ண, வருபெருந்தானை மறக்கள மருங்கின் - பெரிய சேனைகளோ டெதிர்ந்த போர்க்களத்திலே, ஒரு பகல் எல்லை உயிர்த்தொகை உண்ட செங்குட்டுவன் - ஒரு பகற் பொழுதினுள்ளே உயிருண்ட செங் குட்டுவன் ;

வேந்தனாகிய செங்குட்டுவன் எனக் கூட்டுக. தமிழாற்றல் - தமிழ் வேந்தரின் ஆற்றல், தமிழ் மறவரின் ஆற்றல், தமிழ்நாட்டினரின் ஆற்றல். செயிர் செற்றம் ; துன்பமுமாம். செயிர்த்தொழில் - செயிரை விளக்குந் தொழில். உண்ட - உண்டனவாகிய போர்கள் ; வினைப்பெயர். ஞாலம் ஆண்டு முதலியவற்றுடன் ஒன்பதிற்றிரட்டியைக் கூட்டிப் போர்கள் அவற்றில் முடிந்தனவென் றெண்ண ; தேவாசுர யுத்தம் பதினெட்டாண்டிலும், இராம ராவண யுத்தம் பதினெட்டு மாதத்திலும், பாண்டவ துரியோதன யுத்தம் பதினெட்டு நாளிலும், செங்குட்டுவனும் கனகவிசயரும் செய்த யுத்தம் பதினெட்டு நாழிகையிலும் முடிந்தனவென் றெண்ண வென்க ; 1"தேவாசுர ராமாயண மாபாரத முளவென், றோவாவுரை யோயும் படி யுளதப்பொரு களமே" என்பது அறியற்பாலது. இவன் போர் பதினெட்டு நாழிகையில் முடிவுற்ற தென்பதனை, 2"எருமைக் கடும் பரி யூர்வோ னுயிர்த்தொகை, ஒருபகலெல்லையி னுண்ணு மென்ப, தாரிய வரச ரமர்க்களத் தறிய, நூழி லாட்டிய சூழ்கழல் வேந்தன்" என்ற குறிப்பானுமறிக. ஆரிய மன்னரை ஒரு பகலெல்லை உயிர்த் தொகையுண்ட செங்குட்டுவன் என்றியையும்.


1. கலிங். களம். 1. 2 சிலப். 26: 215-8.