|
50
|
மாடல மறையோன் வந்து தோன்றி
வாழ்க வெங்கோ மாதவி மடந்தை
கானற் பாணி கனக விசயர்தம்
முடித்தலை நெரித்தது முதுநீர் ஞாலம்
அடிப்படுத் தாண்ட அரசே வாழ்கெனப்
|
|
மாடல மறையோன் வந்து தோன்றி - மாடலனாகிய அந்தணன் அரசன்முன் வந்து தோன்றி, வாழ்க
எங்கோ-எம் வேந்தே வாழ்வாயாக, மாதவி மடந்தை கானற்பாணி-மாதவியாகிய மகளின் கானல்வரிப்
பாட்டு, கனகவிசயர்தம் முடித்தலை நெரித்தது - கனகனும் விசயனும் என்பாருடைய முடியணிந்த
தலையினை நெரித்தது, முதுநீர் ஞாலம் அடிப்படுத்து ஆண்ட அரசே வாழ்கென - கடல்சூழ்ந்த
இவ்வுலகைத் தன் கீழ்ப்படுத்து ஆட்சி புரிந்து மன்னனே வாழ்வாயாகவென்று கூற ;
நெரித்தது - நெருக்கி வருத்தியது.
மாதவி பாடிய கானல்வரியானே கோவலன் அவளைப் பிரிந்து கண்ணகியொடு கூடி மதுரை சென்று
கொலைப்பட, அது பொறாத கண்ணகி மதுரையை எரியூட்டிச் சென்று நெடுவேள் குன்றத்துத் தன்
கணவனைக் கூடித் துறக்கம் புக்கனளாக, அவளைத் தெய்வமாகக் கொண்டு வழிபட விரும்பி அவளுருவமைக்க
இமயமலையிற் கற்கொணர்ந்த செங்குட்டுவன் இவர் தலையிற் சுமத்திக் கொணர்ந்தனன் ஆகலான்,
கானற்பாணி யானது முடித்தலை நெரிதற்கு வழிவழிக் கருவியாயிற்று. கருவியை வினைமுதலாக்கி
நெரித்தது என்றார். |
|