|
60
|
கானலந் தண்டுறைக் கடல்விளை யாட்டினுள்
மாதவி மடந்தை வரிநவில் பாணியோடு
ஊடற் காலத் தூழ்வினை யுருத்தெழக்
கூடாது பிரிந்து குலக்கொடி தன்னுடன்
மாட மூதூர் மதுரை புக்காங்கு
|
|
கானல்அம் தண் துறைக் கடல் விளையாட்டினுள் - சோலைசூழ்ந்த குளிர்ந்த துறையையுடைய கடல்
விளையாட்டிடத்தே, மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு - மாதவி பாடிய வரிப்பாட்டுடனே,
ஊடற்காலத்து ஊழ்வினை உருத்து எழ - ஊடுதலுண்டாய பொழுது முன்னை வினையானது பயனளிக்க உருக்கொண்டு
எதிர்தலான், கூடாது பிரிந்து - மாதவியோடு கூடாதே பிரிந்து சென்று, குலக்கொடி தன்னுடன்
மாடமூதூர் மதுரை புக்கு - உயர்குடியிற் பிறந்தோளாகிய கண்ணகியுடன் கூடி மாடங்களையுடைய
பழமையான மதுரை நகரினை அடைந்து ;
கடல் விளையாட்டினுள் - நகரமாந்தரும்
மாதரும் கடல் விளையாட்டு நிகழ்த்தும் பொழுதில் ;கடற்றுறைக் கானல் விளையாட்டில் என்றலுமாம்.
கானல் - கடற்கரைச் சோலை. மடந்தை நவில் வரிப்பாணி யென்க. வரிப்பாணியோடு ஊழ்வினையும்
எழ என்க. 1"யாழிசைமேல் வைத்துத்
தன் ஊழ்வினை யுருத்ததாகலின், உவவுற்ற முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்" என்றார்
முன்னும். உருத்து - வெகுண்டு என்றுமாம்.
|
1
சிலப். 7 : 55--6.
|
|