|
90
95
|
மைந்தற் குற்றதும் மடந்தைக் குற்றதும்
செங்கோல் வேந்தற் குற்றதுங் கேட்டுக்
கோவலன் தாதை கொடுந்துய ரெய்தி
மாபெருந் தானமா வான்பொரு ளீத்தாங்கு
இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு
அந்தர சாரிகள் ஆறைம் பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று
துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும்
|
|
மைந்தற்கு உற்றதும் மடந்தைக்கு உற்றதும் - தன் புதல்வனுக்கு நேர்ந்ததனையும் கண்ணகிக்கு
நேர்ந்ததனையும், செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு - செங்கோலையுடைய பாண்டியனுக்கு
நேர்ந்ததனையுங் கேள்வியுற்று, கோவலன் தாதை கொடுந்துயர் எய்தி - மாசாத்துவான் கொடிய
துன்பத் தினை அடைந்து, மாபெருந்தானமா வான்பொருள் ஈத்து-மிக்க சிறப்புடைய தானமாகத்
தன் சிறந்த செல்வங்களையெல்லாம் அளித்து, ஆங்கு இந்திர விகாரம் ஏழுடன்புக்கு-அப்பொழுதே
இந்திரன் சமைத்த விகாரம் ஏழன்கண்ணும் புகுந்து, ஆங்கு அந்தரசாரிகள் ஆறு ஐம்பதின்மர்
- ஆங்கண் வானத்தியங்கு வோராம் முந்நூற்றுவராய, பிறந்த யாக்கைப் பிறப்பு அற முயன்று
துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும் - தாம் முன்பு பிறந்துவரும் உடலினது பிறப்பு அறும்வண்ணம்
முயற்சி கொண்டு துறந்த சாரணர் முன்பே துறவினை அடையவும்.
தாதை கேட்டுத் துயரெய்தி ஈத்துத்
துறவி யெய்தவும் என்க. வான்பொருள் - அறத்தாறீட்டிய விழுப்பொருள். இந்திர விகாரம்
ஏழ் - அவ்வூர்ப் புத்த சைத்தியத்தில் இந்திரனால் நிருமிக்கப்பட்ட ஏழரங்கு ; இதனை,
1"அந்தரசாரிக ளறைந்தனர் சாற்று,
மிந்திர விகார மேழுடன் போகி" என்பதனானும், அதன் உரைக் குறிப்பானும் அறிக. துறவி
- துறவு ; 2"மாதவி துறவிக்கு" 3"துறவியுள்ளந்
தோன்றி" என வருவன காண்க.
|
1.
சிலப், 10 : 13-4. 2. மணி, 2 :
10.
3. மணி, 26 : 58,
|
|