|
105
|
மற்றது கேட்டு மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு நற்றிறம் படர்கேன்
மணிமே கலையை வான்துயர் உறுக்குங்
கணிகையர் கோலங் காணா தொழிகெனக்
கோதைத் தாமம் குழலொடு களைந்து
போதித் தானம் புரிந்தறங் கொள்ளவும்
|
|
மற்றது கேட்டு மாதவி மடந்தை - அச்செய்தியினை மாதவி கேள்வியுற்று, நற்றாய் தனக்கு
நல்திறம் படர்கேன் மணி மேகலையை வான்துய ருறுக்கும் கணிகையர் கோலம் காணாது ஒழிகென
- யான் நன்மையாகிய பகுதியிற் செல்லக் கடவேன், நீ மணிமேகலையை மிக்க துன்பத்தினைச்
செய்யும் கணிகையர் கோலத்தினளாகச் செய்யாதொழிகவென்று தன் தாயிடத்துச் சொல்லி,
கோதைத் தாமம் குழலொடு களைந்து - கோதை யாகிய மாலையினைக் கூந்தலுடனே களைந்து, போதித்தானம்
புரிந்து அறங்கொள்ளவும்-புண்ணியதானஞ் செய்து துறவறங் கொள்ளவும்;
அது என்றது கோவலற்குற்றது முதலிய செய்தி,
நற்றாய்-ஈன்ற தாய் ; சித்திராபதி, நற்றாய்தனக்குக் காணாதொழிகென்று கூறி யென்க.
வான்றுய ருறுக்குங் கணிகையர் கோலம் என்றாள், அக் கோலத்தால் தான் துன்பமுறுதலான்.
கோதை - ஒழுங்கு எனலு மாம். போதித்தானம் - போதி மாதவர்முன் செய்யும் புண்ணிய தானம். |
|