4. நீர்ப்படைக் காதை





130





135

கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன்
பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞாற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு

ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி
உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசுகெடுத் தலம்வரும் அல்லற் காலைத்
தென்புல மருங்கில் தீதுதீர் சிறப்பின்
மன்பதை காக்கும் முறைமுதற் கட்டிலின்

நிரைமணிப் புரவி ஓரேழ் பூண்ட
ஒருதனி யாழிக் கடவுட் டேர்மிசைக்
காலைச் செங்கதிர்க் கடவுளே றினனென
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்


127
உரை
138

        கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் - கொற்கை நகரத்து இருந்தாண்ட வெற்றிதரும் வேலினை யுடைய செழியன், பொன் தொழிற் கொல்லர் ஈரைஞ்ஞூற்று வர் - பொற் கொல்லர் ஆயிரவரை, ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு - தன்னொரு முலையினைத் திருகியெறிந்து மதுரையை யெரித்த மாபெரும் பத்தினிக்கு, ஒரு பகல் எல்லை உயிர்ப்பலியூட்டி - ஒரு பகற் பொழுதிலே உயிப்பலியாக உண்பித்து, உரைசெல வெறுத்த மதுரை மூதூர் - புகழ் யாங்கணும் பரக்கும்படி மிக்க மதுரையாகிய பழைய ஊர், அரைசு கெடுத்து அலம்வரும் அல்லற்காலை - அரசினையிழந்து மயங்கும் துன்ப மிக்க காலத்தே, தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின் - தென்னாட்டின்கண் குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய, மன்பதை காக்கும் முறை முதற் கட்டிலின்-உயிர்த் தொகுதியினைக் காவல் செய்யும் முறையானே முதன்மை யமைந்த சிங்காதனத்தின் கண், நிரைமணிப் புரவி ஓரேழ் பூண்ட - நிரையான மணித்தார் அணிந்த ஏழு குதிரைகள் பூட்டிய. ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசை - ஒப்பற்ற ஓருருளையினையுடைய திப்பியத் தேரின் மீது, காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என-காலைப் போழ்தில் சிவந்த கதிர்களையுடைய ஞாயிற்றுப்புத்தேள் ஏறினாற் போன்று, மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் - மாலையிற்றோன்றும் திங்களின் வழித் தோன்றலாகிய அவன் ஏறினான் ;

வெற்றிவேற் செழியன் பத்தினிக்குப் 1"பலியூட்டியதனை இந்நூலின் உரைபெறு கட்டுரையானு மறிக ; இவனை இளஞ்செழியன் என்பர் அடியார்க்கு நல்லார். ஈரைஞ்ஞூற்றுவரையென இரண்ட னுருபுவிரிக்க. வெறுத்தல்-மிகுதல். திங்கள் வழியோனாகிய வெற்றி வேற் செழியன் அல்லற்கானலை பலியூட்டிக் கட்டிலில் ஏறினன் என முடிக்க.


1. 1. சிலப்.