|
155
|
நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட
நிரைத்த
கொடும்பட நெடுமதிற் கொடித்தேர் வீதியுள்
குறியவும் நெடியவுங் குன்றுகண் டன்ன
உறையுள் முடுக்கர் ஒருதிறம் போகி
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச்
சித்திர விதானத்துச் செம்பொற் பீடிகைக்
கோயி லிருக்கைக் கோமகன் ஏறி
|
|
நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த-நெடிய கழிகளுடன் சேர்த்தியற்றிய பூந்திரைகளை
வரிசையாக நிரைத்த, கொடும்பட நெடுமதிற் கொடித்தேர் வீதியுள் - வளைந்த படங்காகிய
நீண்ட மதிலினையுடைய கொடிகட்டிய தேர் நிற்கும் தெருவின்கண், குறியவும் நெடியவும் குன்று
கண்டன்ன உறையுள் - குறுகியவும் உயர்ந்தனவுமாகிய மலைகளைக் கண்டாற் போன்ற இல்லங்களையுடைய,
முடுக்கர் ஒரு திறம் போகி - குறுந்தெருவின் ஒரு பக்கத்தே சென்று, வித்தகர் கைவினை
விளங்கிய கொள்கை - ஓவிய நூல் வல்லாரது கைத்தொழில் சிறந்து விளங்கிய கோட்பாட்டினையுடைய,
சித்திர விதானத்துச் செம்பொற் பீடிகைக் கோயிலிருக்கைக் கோமகன் ஏறி - ஓவியமமைந்த
மேற் கட்டியினையுடைய கோயிலிலே செம் பொன்னாற் செய்த தவிசாகிய இருக்கைக்கண்ணே
அரசன் ஏறி யமர்ந்து,
காழ் - குத்துக்கோல், கண்டம் -
நிறத்தாற் கூறுபட்ட திரை; ஆகுபெயர்; 1"நெடுங்காழ்க்
கண்டங் கோலி" என்றார் பிறரும். படம் - படங்கு ; கூடகாரம் எனப்படுவது. படநெடுமதில்
- படமாகிய நீண்டமதில். முடுக்கர் - குறுந்தெரு. சித்திரவிதானத்துக் கோயிலிற் பீடிகை
யிருக்கையென மாறுக.
|
1.
முல்லை. 44.
|
|